ரூபாய் 15 கோடி நஷ்டம்: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தோனி

விளையாட்டு

ரூபாய் 15 கோடி வரை தனக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஓய்வுக்கு பிறகும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது, விளம்பங்களில் நடிப்பது, விவசாயம் செய்வது  என மிகுந்த பிஸியான நபராக தோனி இருக்கிறார்.

வருகின்ற 17-வது ஐபிஎல் தொடர் தான் சென்னை கேப்டனாக தோனி விளையாடப்போகும் கடைசித் தொடர் என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரும் ஐபிஎல் தொடரினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த திவாகர் மற்றும் விஷ்வாஷ் ஆகிய இருவரால், ரூபாய் 15 கோடி வரை தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அகடாமியை அமைப்பது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சார்ந்த திவாகர், தோனியை ஒப்பந்தம் செய்தார்.

திவாகர் ஆர்கா ஸ்போர்ட்ஸ் உரிமைக்கட்டணத்தை செலுத்தி, லாபத்தில் ஒரு பகுதியை தோனியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை, ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கடைபிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை நினைவூட்டியும் கண்டு கொள்ளாததால், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரக் கடிதத்தை தோனி திரும்பப் பெற்றார்.

தொடர்ந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழிக்கு வராததால், தற்போது தோனி சார்பில் ராஞ்சி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தால் ரூபாய் 15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக, தோனி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொடநாடு வழக்கு : எடப்பாடி ஆஜராக உத்தரவு!

மணல் குவாரி விவகாரம் : ED சம்மனுக்குத் தடை!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *