கத்தாரில் நேற்று (டிசம்பர் 18) நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இதனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அர்ஜென்டினா அணியின் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படி அனைவராலும் கொண்டாடப்பட்டும் கூகுளில் தேடப்பட்டும் வந்த அர்ஜென்டினா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பல உள்ளன.

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் 4.58 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டின் மேற்கு மற்றும் தெற்கில் சிலி நாடும், வடக்கில் பொலிவியா, பராகுவே ஆகிய நாடுகளும் வட கிழக்கில் பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளும் எல்லைகளாக உள்ளன.
23 மாகாணங்கள் உள்ள அர்ஜென்டினாவில் தலைநகரமாக புவெனஸ் ஏர்ஸ் உள்ளது. அர்ஜென்டினாவின் மொத்த நிலப்பரப்பு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். பிரேசிலுக்கு அடுத்தபடியாக பரப்பளவின் அடிப்படையில் இது தென் அமெரிக்காவில் இரண்டாவது நாடாகவும், உலகில் எட்டாவது நாடாகவும் உள்ளது.
அர்ஜென்டினா என்னும் சொல்லின் பொருள் ’வெள்ளி’ என்பதாகும். அர்ஜென்டினாவில் வெள்ளிப் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இங்கு வெள்ளி மலை உள்ளது என்ற வதந்தியின் காரணமாக அர்ஜென்டினா என்ற பெயர் வந்துள்ளது.
அர்ஜெண்டினா தென் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. அண்டேசு மலைத்தொடர் இதன் மேற்கிலும், தென் அட்லாண்டிக் பெருங்கடல் இதன் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது.

அர்ஜென்டினாவின் மிகப்பெரிய ஆறாக பரானா உள்ளது. மேலும், லக்கோமாயோ, பராகுவே, பெர்மேகோ, கொலராடோ, ரியோ நேக்ரோ, சலாடோ ஆகிய ஆறுகளும் அர்ஜென்டினாவில் உள்ளன.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அர்ஜென்டினா வணிகத்தில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் விவசாய உற்பத்தியில் அர்ஜென்டினா முதலிடத்தில் உள்ளது. கால்நடை வளர்ப்பில் பிரேசிலுக்கு அடுத்தபடியாகவும், சுற்றுலா மூலமாக வருமானம் பார்ப்பதில் மெக்சிகோவிற்கு அடுத்தபடியாகவும் உள்ளது.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிக பணவீக்கம் மற்றும் வேலையின்மையாலும், 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிதி நெருக்கடியாலும் பல பொருளாதார பிரச்சனைகளை அர்ஜென்டினா சந்தித்தது.
1850 களில் அர்ஜென்டினாவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மிக முக்கியமான பொருளாதார வளமாக இருந்தது. அதிகளவில் கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை பயிரிடப்பட்டன.
விவசாயப் பொருட்கள், இறைச்சி அதிகளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் அர்ஜென்டினாவின் பொருளாதாரம் வெகுவாக வளர தொடங்கியது. நாளடைவில் அர்ஜென்டினா தென் அமெரிக்க நாடுகளில் வளமான நாடாக மாறியது.

1930-களில் பொருளாதார மந்தநிலையால், அர்ஜென்டினா நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது. 1930 முதல் 1970 வரை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அர்ஜென்டினாவின் பொருளாதார கொள்கைகளை மாற்றியமைத்து பொருளாதார தன்னிறைவு நாடாக மாற்ற பெரும் முயற்சிகள் எடுத்தன.
இதன் விளைவாக 1970-ஆம் ஆண்டிற்கு பிறகு எரிபொருள், ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தியை அதிகரித்தது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தது. இதனால் 1970-க்கு பிறகு அர்ஜென்டினாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க ஆரம்பித்தது. பொருளாதார மந்தநிலை குறைந்து அர்ஜென்டினா ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக மாறியது.
அர்ஜென்டினா நாடானது கூட்டாட்சி ஜனநாயக நாடாகும். இங்கு ஸ்பானிஷ் அலுவல் மொழியாக உள்ளது. பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய மொழியாக ஸ்பானிஷ் உள்ளது. இங்குள்ள 21 மாகாணங்களிலும் தன்னாட்சி நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு மாகாணங்களிலும் தனித்தனியான சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
ரேடிகல் சிவிக் யூனியன் என்ற இடதுசாரி கட்சி, ஜஸ்டிசியலிஸ்ட் கட்சி, பெரோனிஸ்ட் என்ற தேசியவாத மற்றும் தொழிலாளர் கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக கட்சி ஆகியவை இங்கு பிரதானமான கட்சிகளாக உள்ளன. தற்போது அர்ஜென்டினாவில் ஜஸ்டிசியலிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆல்பர்டோ ஃபெர்ணான்டோஸ் அர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக உள்ளார்.
அர்ஜென்டினாவில் அதிகளவில் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்களே வசிக்கிறார்கள். இதனால் அர்ஜென்டினா கலாச்சாரமானது பெரும்பாலும் ஐரோப்பா கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியதாக உள்ளது. இங்கு வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டு, மதியம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மாலை மீண்டும் திறக்கப்படுகிறது.

இங்குள்ள மக்கள் தங்கள் பொழுதுபோக்கை பெரும்பாலும், பார்கள் மற்றும் இரவு நேர விடுதிகளில் செலவிடுகின்றனர். அர்ஜென்டினா மக்கள் அதிகளவில் கிரில்லில் சமைக்கப்படும் மாட்டிறைச்சியை விருப்ப உணவாக எடுத்துக்கொள்கின்றனர்.
மேட் என்ற பூர்வீக தேயிலையைப் பயன்படுத்தி கிராமப்புறத்தில் உள்ள பலரும் தேநீர் அருந்துகின்றனர். அர்ஜென்டினா உலகின் முக்கியமான ஒயின் உற்பத்தி நாடுகளில் ஒன்றாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒயின்கள் உலகளவில் மிகவும் புகழ்பெற்றது. இவை பெரும்பாலும் சொந்த நாட்டின் தேவைக்கே போதுமானதாக உள்ளது.
கால்பந்து என்பது அர்ஜென்டினா நாட்டின் உழைக்கும் மக்களின் விளையாட்டாக உள்ளது. கால்பந்து போட்டியானது மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய போட்டியாக உள்ளது.

1980 மற்றும் 90-களில் உலகின் கால்பந்து ஜாம்பவானாக திகழ்ந்த டியாகோ மரடோனா போன்ற வீரர்களை இன்றளவும் அர்ஜென்டினா மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள்.
உலகம் முழுவதும் அர்ஜென்டினா என்றால் பலரது நினைவிற்கும் வருவது கால்பந்து போட்டி தான். ஆனால் அர்ஜென்டினாவின் தேசிய விளையாட்டு என்பது படோ என்ற குதிரைப் பந்தய விளையாட்டாகும்.
இதுமட்டுமல்லாமல் அர்ஜென்டினாவில் பாக்சிங், டென்னிஸ், கூடைப்பந்து, ஹாக்கி, உள்ளிட்ட போட்டிகளும் மிகப்பிரபலமாக அனைவராலும் விளையாடப்பட்டு வருகிறது.
அர்ஜென்டினா கால்பந்து அணி, 15 கோபா அமெரிக்கா கோப்பை, 7 பான் அமெரிக்கன் கோப்பை மற்றும் 3 முறை ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை 6 உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள அர்ஜென்டினா அணி, 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் உருகுவேயிடம் தோல்வியை தழுவியது. தொடர்ந்து 1978-ஆம் ஆண்டு நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
1986-ஆம் ஆண்டு மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து 1990 மற்றும் 2014-ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியை தழுவியது.
36 ஆண்டுகளுக்கு பிறகு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றியை ருசித்துள்ளது. மெஸ்ஸி 5 வயதாக இருந்தபோது அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றியது.
தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளதால் அர்ஜென்டினா மக்கள் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
செல்வம்
Comments are closed.