முகமது ஷமிக்கு என்ன ஆச்சு… களத்துக்கு எப்போது திரும்புவார்?
பெங்கால் ரஞ்சி அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஷமி தேர்வு செய்யப்படாததால், ஆஸ்திரேலிய தொடரில் களம் இறங்குவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்த சமயத்தில் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல் பயிற்சி அளிக்கிறார்.
இதற்கிடையே, ரஞ்சி கோப்பை போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ளார் ஷமி. இதனால், கர்நாடகா, மத்திய பிரதேச அணிகளுக்கு எதிரான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , இந்த இரு போட்டிகளுக்குமே ஷமி தேர்வு செய்யப்படவில்லை.
இதனால், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடரில் முகமது ஷமி பங்கேற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்திய நியூசிலாந்து தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். வேகப்பந்துவீச்சுக்கு சாதமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில், ஷமி போன்ற அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் களமிறங்குவது இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
இது குறித்து ஷமி கூறுகையில், ”அடுத்து களத்துக்கு வரும் போது ,100 சதவீத உடற்தகுதியுடன் பங்கேற்க விரும்புகிறேன். எனவே, அதற்கான முயற்சியில் முழு முனைப்பில் ஈடுபட்டுள்ளேன்” என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இன்ஸ்டாவில் ஐஸ்வர்யாராய் பின்தொடரும் ஒரே நபர்… யார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்க கூடாது: தயாநிதி மாறன் ஆட்சேபம்!