இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த போட்டியானது, செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலியில் துவங்க உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.

முகமது ஷமிக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், முகமது ஷமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முகமது ஷமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் கூறும்போது, “கொரோனா தொற்று அறிகுறிகள் லேசாக உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.
கொரோனா தொற்று பாதிப்பினால் ஷமி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு குணமடைந்தவுடன், அவர் மீண்டும் அணியில் இணைவார்.
செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்கா தொடருக்குள்ளாக அவர் குணமடைந்து அணியில் சேருவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பால், முகமது ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இல்லாதது, இந்திய அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
செல்வம்
டி20: தரமான இந்திய அணி-புகழ்ந்த இலங்கை வீரர்
நள்ளிரவில் நடந்த கோர விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!