சாம்பியன்ஸ் டிராபியில் கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலிய அணியுடனான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் முகமது ஷமி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தின் போது, முகமது ஷமி எனர்ஜி டிரிங்க் அருந்தினார். இதை பார்த்த இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் சிலர் முகமது ஷமியை விமர்சித்துள்ளனர்.Mohammed Shami Ramadan fasting row
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா ஷாகாபூதின் ரெஸ்வி கூறியுள்ளதாவது, ‘ ரமலான் மாதத்தில் நோன்பு இருக்காமல் ஷமி பாவம் செய்துள்ளார். ஷரியத் சட்டத்தின்படி அவர் ஒரு கிரிமினல். இஸ்லாமியராக இருப்பவர்கள் ஷரியத் சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் இது பொருந்தும். நோன்பு இருப்பது இஸ்லாமில் கட்டாயம் ஆகும். கிரிக்கெட் விளையாடுவது தவறல்ல. அதே வேளையில், மத பொறுப்புகளை தட்டி கழிக்க கூடாது’ என்று கூறியுள்ளார்.
அதேவேளையில், பிற இஸ்லாமிய தலைவர்கள் முகமது ஷமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்திருந்த காங்கிரஸ் கட்சியின் ஷாமா முகமது, இது குறித்து கூறுகையில், ‘இஸ்லாத்தில், ரம்ஜான் மாதத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. நாம் பயணம் செய்யும் போது, நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை. முகமது ஷமி பயணத்தில் இருக்கிறார். அவர் தனது சொந்த இடத்தில் இருக்கவில்லை. விளையாட்டை விளையாடும்போது, நீங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. உங்கள் செயல்கள்தான் மிகவும் முக்கியம். இஸ்லாம் அறிவியல்பூர்வமான மதம்’ என்று கூறியுள்ளார்.Mohammed Shami Ramadan fasting row
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர் மவுலானா காலீத் ரஷித் கூறுகையில், ‘ குரான் கொடுத்துள்ள வழிகாட்டுதலின்படி பயணம் மேற்கொள்வோர், உடல் நலம் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் நோன்பு இருக்க வேண்டியதில்லை. முகமது ஷமி ஒரு பயணத்தில் இருக்கிறார். அவர் நோன்பு இருக்க வேண்டிய கட்டாயமில்லை. யாரும் அவரை நோக்கி கேள்வி எழுப்ப முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.