நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
பரபரப்பான அந்த ஆட்டத்தில் 46 வது ஓவரை வீசிய முகமது சிராஜ் 45 பந்துகளுக்கு 57 ரன்கள் எடுத்திருந்த மிச்சேல் சாட்னரை அவுட்டாக்கியதுடன் அடுத்து வந்த சிப்லேவே கோல்டன் டக் அவுட்டாக்கி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். இருப்பினும் மறுபுறம் வெளுத்து வாங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் 12 பவுண்டரி 10 சிக்ஸருடன் 140 (78) ரன்கள் குவித்து போராடி சர்துள் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
அந்த ஆட்டத்தில் இரட்டை சதமடித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றாலும் பந்து வீச்சில் இதர பவுலர்களை காட்டிலும் 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 46 ரன்களை மட்டும் கொடுத்து 4.60 என்ற சிறப்பான எக்கனாமியில் அபாரமாக செயல்பட்டார் முகமது சிராஜ்.
பவர் பிளே ஓவர்களில் அதிரடி வீரர் டேவோன் கான்வேயை 10 ரன்னில் அவுட்டாக்கிய அவர் மிடில் ஓவர்களில் நிதானமாக ஆட நினைத்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை 24 ரன்களில் காலி செய்தார். மொத்தத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை போட்டியின் அனைத்து நேரங்களிலும் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்த முகமது சிராஜ் சமீபத்திய இலங்கை தொடரிலும் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருந்தார்.
குறிப்பாக காயமடைந்த பும்ராவுக்கு பதிலாக வாய்ப்பை பெற்று அபாரமாக செயல்படும் அவர் ஒருநாள் போட்டிகளில் தற்சமயத்தில் சிறந்த பவுலிங் சராசரியை கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளராக (21.02) பும்ராவை மிஞ்சி சாதனைப்படுத்துள்ளார்.
இதைப் பார்க்கும் ரசிகர்கள் பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடட்டும் இவரை 2023 உலகக்கோப்பையில் தேர்வு செய்யுங்கள் என்று சமூக வலைதளங்களில் ஆதரவு கொடுக்கிறார்கள். முன்னதாக இப்போட்டி தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்றதால் அதற்கு தனது குடும்பத்தை சிராஜ் அழைத்து வந்திருந்தார்.
2021இல் தனது தந்தை இறந்த போது தேசப்பற்றுடன் ஆஸ்திரேலியாவில் சிராஜ் விளையாடியதை யாரும் மறக்க முடியாது. அப்படி தாய் நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த தனது மகன் பற்றி அவரது தாய் பேசியது பின்வருமாறு. “சிராஜ் எங்களை இப்போட்டியை மைதானத்திற்கு நேரில் வந்து பார்ப்பதற்கு விரும்பி அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார்.
அவருடைய தந்தை இப்போது இருந்தால் நிச்சயமாக பெருமை அடைந்திருப்பார். எனது மகன் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரசில் சீட் யாருக்கு?
முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு கூடுதல் துறைகள்!