டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக விலகிய பும்ராவிற்கு பதிலாக, மாற்று வீரராக முகமது ஷமி களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 16-ஆம் தேதி துவங்குகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அக்டோபர் 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக, மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பும்ராவிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சில் அனுபவம் மிக்க முகமது ஷமியை களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கோவிட் 19 தொற்று காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி ஆடவில்லை.
இந்நிலையில் முகமது ஷமி கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்டு உடல் தகுதி பெற்றுள்ளார். இதனால் அவரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் பிரிஸ்பேனுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முகமது ஷமி, ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார்.
ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஆஸ்திரேலிய டி20 உலக கோப்பைக்கு பறக்க வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார். இதனால் அவருக்கு இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை. முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் உள்ளிட்டவர்களின் உடற் தகுதி பரிசோதனைக்கு பிறகு மாற்று வீரரை இந்திய அணி அறிவிக்கும்.
செல்வம்
வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி!
2014க்கு பிறகு 2023ல் தல – தளபதி பொங்கல்!