கே.எல்.ராகுல் விரைவில் ஆட்டமிழப்பதற்கு காரணமே அவருடைய தவறான ஷாட் செலக்சன் தான். அதனை மட்டும் அவர் சரி செய்து கொண்டால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார்.
இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல் ராகுல் சமீபகாலமாகவே பேட்டிங்கில் சொதப்புவதாக அவர் மீது ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் பொறுப்பையும் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அவரிடம் இருந்து பறித்து ஹர்திக் பாண்டியாவிற்கு கொடுத்துள்ளது.
ஒரு பக்கம் கே.எல் ராகுல் மீது விமர்சனங்கள் எழுந்து வர மறுபுறம் பாண்டியா கேப்டன்ஷிப்பில் அசத்தி வருகிறார். எனவே எதிர்கால கேப்டனாகவும் அவர்தான் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியில் தனது இடத்தை இழக்க இருக்கும் அபாயத்தில் உள்ள கே.எல் ராகுல் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறார்.
ஒருவேளை இந்த தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எதிர்வரும் தொடர்களில் அவரது இடம் கேள்விக்குறியாகும்.
எனவே, கே.எல். ராகுல் இந்த சரிவிலிருந்து எவ்வாறு மீள வேண்டும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் கே.எல் ராகுல் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,
”கே.எல் ராகுல் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மை இல்லை. ஆனால் இதனை அவர் அவரால் சரி செய்ய முடியும்.
தொடர்ச்சியாக கே.எல் ராகுல் ரன்களை குவித்து சீராக பயணிக்க வேண்டும் எனில் கட்டாயம் இந்த நேரத்தில் அவருக்கு உதவ பயிற்சியாளர்கள் தான் முன்வர வேண்டும்.
அவரின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தாலும் அவருடைய ஷாட் செலெக்சன் மற்றும் பந்தினை எங்கு அடிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் அவருடைய பிரச்சினைக்கு தீர்வினை பயிற்சியாளர்கள் வழங்க வேண்டும்.
ராகுல் விரைவில் ஆட்டமிழப்பதற்கு காரணமே அவருடைய தவறான ஷாட் செலக்சன் தான். அதனை மட்டும் அவர் சரி செய்து கொண்டால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்” என கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : கோதுமை ரவை இனிப்பு பொங்கல்
பொங்கல்: தாம்பரம் – நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரயில் – இன்று முன்பதிவு தொடக்கம்.