டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகுவதால் அவருக்கு பதில் இந்திய அணியில் விளையாடும் வீரர் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளன.
16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இதில் வேகபந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுடன் இணைந்து ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பும்ரா விலகல்
இந்நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக நேற்று (செப்டம்பர் 29) அறிவிக்கப்பட்டது.
முதுகுவலி காரணமாக பும்ரா ஆசியக் கோப்பை போட்டிகளிலும் விளையாடவில்லை. ஓய்விற்குப் பிறகு டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் மீண்டும் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து பும்ரா விலகுகிறார்.
பும்ராவிற்கு பதில் யார்

தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் விளையாடி வருகிற இந்திய அணியில் முகமது சிராஜ் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் உலகக் கோப்பை போட்டியிலும் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் மற்றும் காயம் காரணமாக ஓய்விலிருந்த ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டியில் பும்ராவிற்கு பதில் இந்திய அணியில் முகமது சிராஜ் விளையாடுகிறார் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
மோனிஷா