காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் இன்று சந்தித்தார்.
காமன்வெல்த் போட்டி 2022 இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் 61 பதக்கங்களை குவித்தனர். 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றது.
போட்டியில் கலந்து கொண்டு நாடு திரும்பிய இந்திய வீரர்களை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தத் தருணம் இந்திய விளையாட்டின் பொற்காலம். நாம் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள். நீங்கள் இங்கிலாந்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, நள்ளிரவு வரை உங்களது ஒவ்வொரு அசைவுகளையும் இந்தியர்கள் இங்கு இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
உங்களுடைய வெற்றிகளை அறிந்து கொள்வதற்காக இந்தியர்கள் அலாரம் வைத்து உறங்கினார்கள். பாக்ஸிங், ஜூடோ, மல்யுத்தம் என அனைத்து போட்டிகளிலும் நம்முடைய இந்திய மகள்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்களின் வெற்றி தனித்துவமானது. காமன்வெல்த் போட்டி நடைபெறுவதற்கு முன்னாள் நான் உங்களிடம் கூறியதைப் போல நீங்கள் வெற்றி பெற்று தாயகம் திரும்பும் போது நாம் அந்த வெற்றியைக் கொண்டாடுவோம் என்று கூறியிருந்தேன். நீங்கள் பதக்கங்களுடன் திரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எந்த வேலை எனக்கு இருந்தாலும், உங்களை சந்திக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். மற்ற இந்தியர்களைப் போலவே நானும் உங்களிடம் பேசுவதில் பெருமை கொள்கிறேன். புதிய விளையாட்டுக்களில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. நமது செயல்திறனை மேலும் மேம்படுத்த வேண்டும்.” என்று பிரதமர் மோடி வீரர்களிடம் உரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார்.
செல்வம்
ஒரு ஓவரில் 22 ரன்கள்… அதிரடி காட்டிய புஜாரா