விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து பரிசளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
2024-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று (ஜனவரி 2) அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ள விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஹர்மன்பிரீத் சிங், பிரவீன் குமார், மனு பாக்கர் ஆகியோருக்கு 2024-ஆம் ஆண்டுக்கான் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீரர்கள் நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ், துளசிமதி முருகேசன் ஆகியோருக்கு விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்திறனுக்கான அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுகிறது.
விருது பெறும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு வாழ்த்துக்கள்.
நமது வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து விளையாட்டு வீரர்களும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விடா முயற்சி : காய்ச்சலுடன் நடித்த அஜித்… கஷ்டப்பட்டும் வீணானதால் அப்செட் !