மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஆசைப்பட்டபடியே, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகியுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று (மே 6) நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீர்ர்களாக கேமரூன் க்ரீன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
தீபக் சஹார் வீசிய முதல் ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரிடன் 10 ரன்கள் குவித்தனர். எனினும் துஷார் தேஷ்பாண்டே வீசிய அடுத்த ஓவரில் க்ரீன் 6 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார்.
அதனைத்தொடார்ந்து கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் முதன்முறையாக 3வது விக்கெட்டுக்கு களமிறங்கினார்.
அப்போது மீண்டும் தனது ஓவரை வீச வந்த தீபக் சஹார், அற்புதமான பந்துவீச்சால் இஷான் கிஷன்(7) மற்றும் ரோகித் சர்மாவை(0) வெளியேற்றினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திற்கு (16வது முறை) வந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் 15 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.
தோனியின் கேப்டன்சியே காரணம்
ரோகித் சர்மாவின் விக்கெட்டை தீபக் சஹார் வீழ்த்தியிருந்தாலும், தோனியின் கேப்டன்சியே காரணமாக பார்க்கப்படுகிறது.
சஷார் வீசியதன் காரணமாக ஸ்டம்பை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்த விக்கெட் கீப்பர் தோனி, 4 பந்து வீசிய பிறகு ஸ்டம்புக்கு அருகில் வந்தார். இதனால் இறங்கி ஆட முடியாமல் நின்ற ரோகித், அடுத்த பந்திலேயே ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை ‘ரோகித்தை ஆட்டமிழக்க தோனி போட்ட ஸ்கெட்ச்’ என்று ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
சிறுவன் ’தமிழ்’ ஆசை பலித்தது!
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சேப்பாக்கத்திற்கு முதன்முறையாக வந்திருந்த மதுரையை சேர்ந்த ’தமிழ்’ என்ற சிறுவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சிறுவன் தமிழ், “ரோகித் சர்மா டக் அவுட் ஆக வேண்டும்’ என்று ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.
அவர் ஆசைப்படியே தற்போது ரோகித் சர்மாவும் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா