கத்தார் உலகக்கோப்பையில் இன்று(டிசம்பர் 1) நள்ளிரவில் நடைபெற்ற ஆட்டங்கள் முக்கியமான ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் குரூப் சியில் இடம்பிடித்துள்ள மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியுடன் போலாந்து, மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் போலந்தை 0-2 என்ற கணக்கில் அர்ஜென்டினாவும், சவுதியை 1-2 என்ற கணக்கில் மெக்சிகோவும் வீழ்த்தின. 6 புள்ளிகளுடன் பிரிவில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா அணியும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் போலந்தும் ரவுண்ட் ஆப் 16 எனப்படும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இப்படி பரபரப்பாக விறுவிறுப்பாக நடந்த இந்த இரண்டு ஆட்டங்களுக்கு நடுவே அர்ஜென்டினா அணியின் மெசியா(மீட்பர்) என்றழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி மிஸ் செய்த பெனால்டி தான் தற்போது கால்பந்து உலகில் பேசுபொருளாகி உள்ளது.
அர்ஜென்டினாவின் வெற்றி வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கும் மெஸ்ஸி, போலந்து உடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை மிஸ் செய்தார்.
இருப்பினும் அடுத்தடுத்த 2 கோல்கள் அடித்து மெஸ்ஸியை பெரும்பழியில் இருந்து காப்பாற்றியுள்ளனர் சக அர்ஜென்டினா அணி வீரர்கள்.
இதன்மூலம் கிளப் மற்றும் நாட்டுக்காக விளையாடியுள்ள ஆட்டங்களில் சேர்த்து அவர் மிஸ் செய்த பெனால்டி வாய்ப்புகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் முக்கியமான ஆட்டங்களில் மெஸ்ஸி மிஸ் செய்த டாப் 5 பெனால்டி வாய்ப்புகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

1.அர்ஜென்டினா vs போலாந்து, 2022 உலகக்கோப்பை (லீக் போட்டி)
டிசம்பர் 1ம் தேதி கத்தாரின் மைதானம் 974ல் நடைபெற்ற போட்டி இரு அணிகளுக்கும் கடைசி லீக் என்பதால் முக்கியமானதாக இருந்தது.
எனினும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றியைத் தவிர வேறெதுவும் அடுத்த சுற்றுக்கு அழைத்துச் செல்லாது என்று நெருக்கடியான நிலைமையில் விளையாடியது.
போட்டியின் ஆரம்பம் முதல் அர்ஜென்டினா அணி வீரர்கள் போலந்து அணியின் கோலை நோக்கி சரமாரியான தாக்குதல்களை நடத்தினாலும் கோல் போட முடியவில்லை.
இந்நிலையில் தான் 37-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தலையால் கோல் அடிக்க முயன்றபோது போலந்து கோல் கீப்பரின் கை மெஸ்ஸியின் முகத்தில் பட்டதால் நடுவரின் தலையீட்டில் அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது.
பெனால்டியை கோலாக்குவதில் வல்லவரான மெஸ்ஸியே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். ஆனால் போலந்து அனுபவ கோல் கீப்பர் செசஸ்னி பந்தை துல்லியமாக கணித்து பாய்ந்து சென்று கோலை ஒரு கையால் தடுத்துவிட்டார்.
இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டவர் என்ற மோசமான சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
அதே நேரத்தில் உலகக் கோப்பை போட்டிகளில் இரு பெனால்ட்டிகளை தடுத்த 3வது கோல்கீப்பர் என்ற பெருமையை செசஸ்னி பெற்றுள்ளார்.

2.அர்ஜென்டினா vs சிலி, 2016 கோபா அமெரிக்கா (இறுதிப் போட்டி)
தென் அமெரிக்காவில் பிரபலமான கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பை எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும்.
அதன்படி 2016ம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்க தொடரில் அதுவரை எந்த சர்வதேச கோப்பையும் வாங்காததால் மெஸ்ஸியின் மீது நெருக்கடி குவிந்திருந்தது.
அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா மற்றும் சிலி இறுதிப்போட்டியில் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலை பெற்றதால் பெனால்டி சூட் அவுட் வழங்கப்பட்டது.
அதில் அர்ஜென்டினா அணியின் சார்பாக முதல் பெனால்டி கிக் அடித்த மெஸ்ஸி கோல் வலைக்கு மேல் பந்தை பறக்கவிட்டு வீணடித்தார். ஆனால் வாய்ப்பை தவறவிடாத சிலி இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
இந்த தோல்வியினால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான மெஸ்ஸி போட்டி முடிந்ததும், அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
எனினும் ரசிகர்கள் மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வை வாபஸ் பெற்ற மெஸ்ஸி, 2021ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டினா அணிக்காக வென்றது குறிப்பிடத்தக்கது.

3.அர்ஜென்டினா vs ஐஸ்லாந்து, 2018 உலகக்கோப்பை (லீக் போட்டி)
2018ம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா தனது முதல் லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்தை எதிர்கொண்டது.
முதல்பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. இரண்டாம் பாதியில் எப்படியாவது முன்னிலை பெற்று தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட துடித்தது அர்ஜென்டினா.
அதன்படியே இரண்டாம் பாதியில் 64 வது நிமிடத்தில் ஆகாயமார்க்கமாக வந்த லாங் பால் ஐஸ்லாந்து கோல் பாக்சுக்குள் எடுக்க முயன்ற அர்ஜென்டினா வீரர் அகுயேரோவை ஐஸ்லாந்து வீரர் மேக்னூசன் கீழே தள்ளி விட்டார்.
இதனையடுத்து அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. வெற்றிபெற ஒரு கோல் போதும் என்ற நிலையில் பெனால்டி கிக்கை மெஸ்ஸி அடித்தார். பந்து தடுத்துவிடக்கூடிய உயரத்தில் பறக்க வலப்புறம் டைவ் அடித்த ஐஸ்லாந்து கோல்கீப்பர் ஹால்டர்சன் பந்தை அற்புதமாகத் தள்ளி விட்டார். இதனால் அந்த போட்டி டிராவில் முடிந்தது.

4.பார்சிலோனா vs செல்சியா, 2012 சாம்பியன்ஸ் லீக் (அரையிறுதி போட்டி)
2012ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் பார்சிலோனா மற்றும் செல்சியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல்பாதியில் 2-1 என்ற கணக்கில் பார்சிலோனா முன்னிலையில் இருந்தது.
அதனைத்தொடர்ந்து இரண்டாம் பாதி தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடிக்க, அது போஸ்டில் பட்டு எகிறி சென்றது.
அந்த அரையிறுதியில் போட்டியில் தோல்வியடைந்துடன் எஃப்சி பார்சிலோனா அணி போட்டியிலிருந்தும் சோகத்துடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

5.பிஎஸ்ஜி vs ரியல் மாட்ரிட், 2022 யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் (லீக் போட்டி)
இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி மாறிய பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியும், ரியல் மாட்ரிட் அணியும் பிரான்சில் உள்ள லே பார்க் பிரின்சஸ் மைதானத்தில் மோதின.
ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் பிஎஸ்ஜி பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதனை தனது இடது காலால் ஓங்கி அடித்தார் மெஸ்ஸி. எனினும் பக்காவாக பந்தை கணித்த ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் கோர்டோயிஸ் இடப்புறம் பாய்ந்து அபாரமாக தடுத்தார்.
இது மெஸ்ஸி தனது கேரியரில் தவறவிட்ட30வது பெனால்டி கிக்காக அமைந்தது. மேலும் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக்கில் அதிக பெனால்டிகளை (5) தவறவிட்ட தியரி ஹென்றியின் சாதனையை சமன் செய்தார்.
எனினும் இந்த போட்டியில் 94வது நிமிடத்தில் சகவீரரான மெக்கெப்பே அடித்த ஒரு கோலால் பிஎஸ்ஜி அணி வெற்றி பெற்றது.
கிறிஸ்டோபர் ஜெமா