உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இதன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் 18 வருட கனவும் நிறைவேறியுள்ளது.
மெஸ்ஸியின் கனவு நிறைவேறுமா? புதிய சரித்திரம் படைக்குமா பிரான்ஸ்? மெஸ்ஸியா? எம்பாப்பேவா? இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் நேற்று இரவு (டிசம்பர் 18 ) தொடங்கியது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி.
கடந்த 28 நாட்களாக ஒரு கோப்பையை கைப்பற்றுவதற்காக முட்டிமோதியதில், அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
2014ம் ஆண்டு போல் இம்முறை தவறு நடக்காது என்று அர்ஜென்டினா ரசிகர்களும், 2018 போல் கோப்பை மீண்டும் எங்கள் கைகளில் தவழும் என்று மைதானத்திலேயே முஷ்டியை முறுக்கினார்கள் இரு அணி ரசிகர்களும்.
ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே நெருப்பு பற்றி கொண்டது. ஒவ்வொரு பாஸ்-க்கும், ஒவ்வொரு கிராஸ்-க்கும் ரசிகர்கள் செய்த ஆரவாரம் விண்ணை முட்டியது. அர்ஜென்டினா அணி கடந்த போட்டியில் கோல் அடித்த ஆல்வரஸ்-க்கு பதிலாக டி மரியாவை களமிறக்கி இருந்தது.
திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கே பரபரப்பு உச்சத்தில் இருக்க, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு இதயதுடிப்பு எகிறியிருக்கும். இந்த நிலையில் ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் பாக்ஸிற்குள் டி மரியா பந்தை கொண்டு செல்ல, பிரான்ஸ் அணியின் டெம்பலே ஃபவுல் செய்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் மெஸ்ஸி அடித்துள்ள 5 கோல்களில் 3 கோல்களில் பெனால்டி வாய்ப்பில் அடிக்கப்பட்டவை தான். ஒரேயொரு ஒரு முறை மட்டுமே பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்காமல் மெஸ்ஸி தவறவிட்டிருந்தார்.
இதனால் பெனால்டியை மெஸ்ஸி எடுத்தார். அதற்கேற்ப உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக லயோனல் மெஸ்ஸியே முதல் கோலை அடித்து அசத்தினார்.
இது உலகக்கோப்பைத் தொடரில் மெஸ்ஸி அடிக்கும் 6-வது கோலாகும். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து அர்ஜென்டினா அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினர். பின்னர் 36-வது நிமிடத்தில் பிரான்ஸ் எல்லைக்குள் மெஸ்ஸி அசாத்தியமாக பந்தை கொண்டு சென்று சரியான நேரத்தில் டி மரியாவிடம் பாஸ் செய்தார். அதனை அற்புதமாக பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸை கடந்து கோலாக்கினார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன் பின்னர் பிரான்ஸ் அணி தரப்பில் 40-வது நிமிடத்திலேயே நட்சத்திர வீரர்களான ஜீருட் மற்றும் டெம்பலே மாற்றப்பட்டு, மூவானி மற்றும் துரன் ஆகியோர் மாற்று வீரர்களாக களமிறக்கப்பட்டனர்.
தொடர்ந்து 45-நிமிடங்கள் முடிவுக்கு வந்த நிலையில், கூடுதலாக 7-நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் பிரான்ஸ் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இருந்தும் பிரான்ஸ் அணியால் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் அர்ஜென்டினா அணியின் முன்னிலையோடு முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி மீண்டும் அட்டாக்கை தொடங்கியது. 50-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பை, பிரான்ஸ் அணி தடுத்து நிறுத்தியது. பின்னர் 52-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி கோல் அடிக்க எடுத்த முயற்சியை, அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் தடுத்து நிறுத்தினார்.
தொடர்ந்து 64-வது நிமிடத்தில் கோல் அடித்த டி மரியா மாற்றப்பட்டு, அகுமா களமிறக்கப்பட்டார். இதனிடையே 70-நிமிடங்கள் கடந்தும் பிரான்ஸ் அணியால் முதல் கோல் அடிக்க முடியவில்லை. 67-வது நிமிடத்தில் இருந்து அடுத்தடுத்து கோல் அடிக்க 3 வாய்ப்புகள் கிடைத்தும் பிரான்ஸ் அணி வீணடித்தது.
இந்நிலையில் , 80-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஓட்டோமெண்டி செய்த தவறு காரணமாக பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை எம்பாப்பே கோலாக்கி அசத்தினார். இதனால் 2-1 என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் அடுத்த நிமிடத்திலேயே மீண்டும் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார். இதற்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரோன் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்.
உலகக்கோப்பைத் தொடரில் இது கிலியன் எம்பாப்பேயின் 7-வது கோலாகும். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் பரபரப்பாகியது. இதன் பின்னர் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் எதிர்கொண்டனர். 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், கூடுதலாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
அதில் பிரான்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து அட்டாக் செய்தனர். எம்பாப்பே கோல் அடிக்க எடுத்த வாய்ப்பு, அர்ஜென்டினா வீரர்களால் தடுக்கப்பட்டது. அடுத்த நிமிடமே மீண்டும் பிரான்ஸ் வீரர்கள் அட்டாக் செய்தனர். அதனை கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் தடுத்து நிறுத்தினார். பின்னர் கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி அட்டாக் செய்ய, அதனை லோரிஸ் தடுத்து நிறுத்தினார். இதன் பின்னர் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.
கூடுதல் நேரத்தின் முதல் பாதி பிரான்ஸ் அணி அட்டாக் மேல் அட்டாக் செய்து கொண்டே இருந்தது. இருந்தும் அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர்கள் தடுத்துக் கொண்டே இருந்தனர். தொடர்ந்து கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் அர்ஜென்டினா அட்டாக் செய்ய தொடங்கியது.
இதன் பலனாக 109-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடிக்க, ஆட்டம் 3-2 என்று பரபரப்பாகியது. ஆனால் அர்ஜென்டினா அணியின் பாக்ஸிற்குள் மாட்டியல் கைகளில் பந்து பட்டு செல்ல, பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் மீண்டும் எம்பாப்பே வந்து நிற்க, 3-வது கோலை அடித்து அசத்தினார்.
இதன் மூலம் மீண்டும் ஆட்டம் 3-3 என்ற நிலைக்கு சென்றது. பின்னர் கூடுதலாக 3 நிமிடங்கள் அளிக்கப்பட, இரு அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினர். ஆனாலும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனால்டி ஷூட் அவுட்டில் முதல் கோலை மெஸ்ஸி அடிக்க, பின்னர் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவும் கோல் அடித்தார். தொடர்ந்து பிரான்ஸ் அணியின் கிங்ஸ்லி இரண்டாவது வாய்ப்பை மிஸ் செய்தார். தொடர்ந்து அர்ஜென்டினா அணியின் பாலோ இரண்டாவது வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
தொடர்ந்து பிரான்ஸ் அணியின் செளமேனி மூன்றாவது வாய்ப்பில் கோலை தவறவிட, தொடர்ந்து வந்த அர்ஜென்டினா அணியின் பரடெஸ் கோல் அடித்தார். இதனால் 3-1 என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பிரான்ஸ் அணியின் கோலோ மவுனி கோல் அடிக்க, பின்னர் வந்த மாண்டியல் 4-வது வாய்ப்பில் கோல் அடித்தார். இதன் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மன்னராட்சியையும், மக்களாட்சியையும் பகுத்தறிவது எப்படி?
வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!