இன்று (டிசம்பர் 10) நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகள் இடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கத்தாரில் உள்ள லுசைஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோல் அடிப்பதற்கு இரண்டு அணிகளுக்கும் சவாலாக இருந்தது.
ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் மொலினா கோல் அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பில், மெஸ்ஸி கோல் அடிக்க தவறவிட்டார். இதற்கு பதிலடியாக, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 73-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து ஆட்டத்தை, அர்ஜென்டினா அணி பக்கம் திருப்பினார்.
இதனால் கோல் அடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு நெதர்லாந்து அணி வீரர்கள் தள்ளப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அட்டாக் செய்ய ஆரம்பித்தனர்.
ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் வவுட் வெகோர்ட்ஸ் கோல் அடித்து நெதர்லாந்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து இரண்டாம் பாதியில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில், 111-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பை வவுட் வெகோர்ட்ஸ் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டத்தின் முடிவில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
ஆட்டம் சமமானதால், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டாலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அர்ஜெண்டினா அணி கோல் கீப்பர் எமிலானா மார்டினஸ் சிறப்பாக செயல்பட்டு நெதர்லாந்து அணி வீரர்கள் அடித்த இரண்டு கோல்களை தடுத்தார்.
இதனால் நெதர்லாந்து அணி வீரர்கள் மூன்று கோல்கள் மட்டுமே அடித்தனர். அர்ஜென்டினா அணி வீரர்கள் நான்கு கோல்கள் அடித்து நெதர்லாந்து அணியை வீழ்த்தினர்.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டிசம்பர் 14-ஆம் தேதி, குரோஷியா அணியை அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி எதிர்கொள்கிறது.
செல்வம்