மெஸ்ஸியை துரத்தும் ரொனோல்டோ: ஜாம்பவான்கள் படைத்த சரித்திர சாதனை!

விளையாட்டு

கால்பந்து உலகின் ஜாம்பவான்களான மெஸ்ஸியும், ரொனோல்டோவும் அடுத்தடுத்த நாட்களில் அபார சாதனை படைத்துள்ளது இருவரின் ரசிகர்களையும் ஒருசேர மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட ருசித்த அறுசுவை விருந்தாக அமைந்தது. கோடிக்கணக்கான ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருக்கும் கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்ஸி மற்றும் ரொனோல்டோவின் கடைசி உலகக்கோப்பை போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் அதனை எதிர்பார்த்தனர்.

இதில் கத்துக்குட்டி அணியான மொரோக்கோவிடம் காலிறுதியில் தோற்று சோகத்துடன் வெளியேறியது ரொனோல்டோவின் போர்ச்சுக்கல் அணி. அதே வேளையில் பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் வென்று சுமார் 40 வருடங்களுக்கு பிறகு பிஃபா உலகக்கோப்பையை மீண்டும் உச்சி முகர்ந்தது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.

இதனையடுத்து ரொனோல்டோ இந்தாண்டில் இணைந்த தனது புதிய அணியான அல் நாசருக்காகவும், மெஸ்ஸி பிஎஸ்ஜி அணிக்காகவும் கிளப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இரு ஜாம்பவான்களுமே தங்களது சொந்த நாட்டு அணிகளுக்காக மீண்டும் விளையாடி தங்களது சாதனை மகுடத்தில் மேலும் ஒரு வைரகற்களை பதித்துள்ளனர்.

800வது கோல் அடித்த மெஸ்ஸி

பனாமாவுக்கு எதிரான நட்புரீதியிலான கால்பந்து போட்டி அர்ஜென்டினா நாட்டு தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் கடந்த 23ம் தேதி இரவு நடைபெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் உலகக் கோப்பை வென்ற பிறகு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பங்கேற்ற முதல் சர்வதேச போட்டி இது என்பதால் இந்த ஆட்டத்தை காண அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.

வெறிகொண்ட 83 ஆயிரம் ரசிகர்களின் கூச்சலுடன் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. எதிர்பார்த்தது போல் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும் முதல் பாதியில் அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதியின் 78-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு திரும்ப, அதன் அருகே தயாராக நின்ற தியாகோ அல்மடா பந்தை கணித்து சரியாக வலைக்குள் திணிக்க அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த 10-வது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் மெஸ்ஸியின் வேகமான பூட்ஸ் பட்டு ராக்கெட் வேகத்தில் சென்ற பந்து தடுப்பு வீரர்களையும் கடந்து கோலாக மாற, அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த வெற்றியைத் தேடி தந்த கோலானது அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் மெஸ்ஸி அடித்த 800-வது கோலாக பதிவானது. இதன்மூலம் 830 கோல் அடித்துள்ள ரொனோல்டோவுக்கு பிறகு 800 கோல்களை அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் மெஸ்ஸி.

அதிக ஆட்டங்கள் கண்ட ரொனோல்டோ

இதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற 17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் ‘ஜெ’ பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி தலைநகர் லிஸ்பனில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் லீக்டன்ஸ்டைன் அணியை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிபடுத்திய போர்ச்சுகல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் லீக்டன்ஸ்டைனை வீழ்த்தியது.

போர்ச்சுகல் அணி தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களையும், ஜயோ கான்செலோ, பெர்னார்டோ சில்வா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

இந்த போட்டியானது போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான 38 வயது ரொனோல்டோவுக்கு 197-வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இதன்மூலம் அதிக சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற உலக சாதனை தற்போது ரொனோல்டோவின் வசம் வந்துள்ளது.

அவரைத்தொடர்ந்து குவைத் அணி வீரர் பாடர் அல் முடாவா 196 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் உள்ளார்.

கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான்களான மெஸ்ஸியும், ரொனோல்டோவும் இரண்டே நாட்களில் அட்டகாசமான இரு சாதனைகளை படைத்திருப்பது அவர்களது கோடிக்கணக்கான ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையல்ல.

கிறிஸ்டோபர் ஜெமா

17 மாவட்டங்களில் கனமழை!

தேஜஸ்வி யாதவ் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *