கத்தாரில் களைகட்டியிருக்கும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நடுவே, ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கிய பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி வரும் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் 32 அணிகள் பங்கேற்று கோப்பையை வெல்ல களயுத்தம் நடத்திவருகின்றன.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் கத்தாருக்கு வருகை தந்துள்ளனர். இதனால் கத்தார் விழா கோலம் பூண்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு உலகளவில் நடக்கும் கால்பந்து போட்டி என்பதால் பல்வேறு நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
ஒட்டகக் காய்ச்சல் அச்சுறுத்தல்
இந்நிலையில், கத்தாரில் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) எனப்படும் ஒட்டகக் காய்ச்சல் நோய்க்கான அச்சுறுத்தல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மெர்ஸ் தொற்று குறித்த உண்மையை கடந்த 22ம் தேதி, ’நியூ மைக்ரோப்ஸ் மற்றும் நியூ இன்பெக்ஸன்’ இதழில் வெளியான ’கத்தார் 2022 FIFA உலகக் கோப்பை: தொற்று அபாயங்கள்’ என்ற ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியது.
இதனையடுத்து ஒட்டகத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவும் மெர்ஸ் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) உட்பட பல சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

28 லட்சம் மக்கள் தொகை கொண்ட பாலைவன நாடான கத்தாரில் ஒட்டகக் காய்ச்சல் பரவல் காணப்படுவது இயல்பு. இதுவரை மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள பல நாடுகளில் MERS-CoV கண்டறியப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு பரவிய ஒட்டக காய்ச்சல் காரணமாக கத்தாரில் 2,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 935 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உலகக்கோப்பையை முன்னிட்டு கத்தாருக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் பேர் வந்துள்ளனர்.
அவர்களையும் சேர்த்து 40 லட்சம் பேர் கத்தாரில் உள்ள நிலையில் மெர்ஸ் தொற்று உலகப் பெருந்தொற்றாக பரவும் அபாயம் உள்ளது.
WHO எச்சரிக்கை
எனவே, கத்தார் உலகக் கோப்பையை காணச் சென்றுள்ள பார்வையாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அந்நாட்டின் சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஒட்டகக் காய்ச்சலின் அறிகுறிகள்
உலக சுகாதார அமைப்பு தகவலின்படி, MERS இன் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இருக்கும். சில நேரங்களில் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சைனைகளும் இருக்கும்.
நோய் தீவிரமடைந்தால் “கடுமையான சுவாச செயலிழப்பை ஏற்படுத்தும். நீரழிவு நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா