4 ஆண்டுகளில் 777 கிரிக்கெட் போட்டிகள்: இந்தியாவுக்கு எத்தனை?

Published On:

| By Prakash

2023 முதல் 2027ஆம் ஆண்டு வரை விளையாட இருக்கும் ஆடவர் கிரிக்கெட் அணியின் அட்டவணையை இன்று (ஆகஸ்ட் 17) ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணி (ஐசிசி போட்டிகளைத் தவிர) 38 டெஸ்டுகள், 42 ஒருநாள், 62 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

ஐசிசி அட்டவணைப்படி, இந்த நான்கு (2023-27) ஆண்டுகளிலும் ஐசிசியில் முழு உறுப்பினர்களாக உள்ள 12 நாடுகளும் மொத்தமாக 777 சர்வதேச ஆட்டங்களை விளையாடவுள்ளன.

அதில் 173 டெஸ்ட் போட்டிகள், 281 ஒருநாள் போட்டிகள், 323 டி20 போட்டிகள் அடங்கும். கடந்த 4 வருடங்களில் இந்த 12 நாடுகளும் 694 ஆட்டங்களில் விளையாடியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்திய அணி 2024ம் ஆண்டு ஜனவரியில், இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகளில் மோத இருக்கிறது. இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருக்கின்றன.

இதைத் தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அவ்வணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் களம்காண இருக்கிறது.

அதேபோல் 2025ம் ஆண்டு ஜூன் மாதம், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அவ்வணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளிலும், 2027ம் ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளிலும் மோத இருக்கிறது. இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

icc schedule

இந்த அட்டவணைப்படி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1992க்குப் பிறகு முதல்முறையாக 5 ஆட்டங்களைக் கொண்ட இரு டெஸ்ட் தொடர்களில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

மேலும், 2023-25ம் ஆண்டுகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

2025-27ம் ஆண்டுகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

இதுதவிர, 2023ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை, 2024ல் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை, 2025ல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை, 2026ல் இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை, 2027ல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை என ஒவ்வொரு வருடமும் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது.

அடுத்து 2024-27ம் ஆகிய ஆண்டுகளில், இந்திய அணி, ஆஸ்திரேலியா (2023 நவம்பர்), இங்கிலாந்து (2025 ஜனவரி), ஆஸ்திரேலியா (2025 அக்டோபர்), தென்னாப்பிரிக்கா (2025 நவம்பர்), நியூசிலாந்து (2026 ஜனவரி), இங்கிலாந்து (2026 ஜூலை), மே.இ. தீவுகள் (2026 செப்டம்பர்), நியூசிலாந்து (2026 அக்டோபர்) ஆகிய அனைத்து அணிகளுடனும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

விக்கெட் இழப்பின்றி வேட்டையாடிய இந்தியா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share