திமுக அணிகள் இடையே இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில்சுவாரசிய சம்பவம் மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. mayor priya issue in dmk cricket
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 14 ஆம் தேதி இந்த கிரிக்கெட் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திமுகவை பல்வேறு அணிகளைச் சேர்ந்த 4 மகளிர் அணிகள், 16 ஆடவர் அணிகள் என மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில் பெண்கள் பிரிவில் இன்று மதியம் 4 அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் திமுக மகளிர் அணி – மேயர் பிரியா தலைமையிலான அணிகள் மோதின.
இதில் முதலில் மகளிர் அணி பேட்டிங் செய்தது. அப்போது இந்த 4வது ஓவரை வீசவந்த மேயர் பிரியா, அடுத்தடுத்து வைடாக பந்துகளை வீசினார். ஒரு கட்டத்தில் அவரே டென்ஷனாகி, ’அதெல்லாம் வைடே இல்லப்பா.. அவங்க அடிக்காம விட்டுட்டு, வைடு வைடுன்னு சொல்றாங்க’ என செல்லமாக அம்பயரிடம் முறையிட்டார்.. அதனைக்கேட்டு மைதானத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
முடிவில் 6 விக்கெட்டுக்கு 34 ரன்கள் குவித்தது திமுக மகளிர் அணி. தொடர்ந்து பேட்டிங் செய்த மேயர் அணி தோல்வியை தழுவியது.
இதனையடுத்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் திமுக மகளிர் அணி இறுதிப்போட்டியில் மோதின. இதில் திமுக ஐடி விங் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
தொடர்ந்து திமுக ஆடவர் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது.
வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ஒரு லட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய், மேன் ஆப்தி மேட்ச், மேன் ஆப்தி சீரிஸ் என்று பல பரிசுகள் வழங்கப்படுகிறது. அதே போல மகளிர் அணிகளில் முதல் இடத்தை பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மற்றும் ஸ்கூட்டி என்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.