கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கத்தில் இருந்து எனக்கு சம்பளம் வரவில்லை என்று 2024 ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கரின் கோச் ஜாஸ்பல் ராணா தெரிவித்துள்ளார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தனியாகவும், 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை மனு பாக்கர் வென்றுள்ளார். ஒரு ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
தன்னுடைய வெற்றிக்கு பிறகு தனது கோச் ஜாஸ்பல் ராணா குறித்து மனு பாக்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறாய் என்று என்னுடைய கோச் கேட்டபோது, துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அநேகமாக ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் வெளிநாட்டுக்கு சென்று படிப்பில் கவனம் செலுத்த இருக்கிறேன் என்று கூறினேன்.
ஆனால், அவர் என்னிடம், இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகிலேயே சிறந்த துப்பாக்கிச் சுடும் நபர்களில் ஒருவர் நீங்கள். எனவே, நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றார். அந்த பேச்சு தான் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. எனது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது” என்றார்.
மனு பாக்கர் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த கோச் ஜாஸ்பல் ராணாவுக்கு கடந்த மூன்று வருடங்களாக முறையாக சம்பளம் வரவில்லை என்கிறார்.
இதுதொடர்பாக RevSportz சேனலுக்கு ஜாஸ்பல் ராணா அளித்த பேட்டியில், “நான் என்னுடைய வேலையை மட்டுமே செய்தேன். மற்றபடி நான் ஒன்றும் இல்லை.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கத்தில் இருந்து எனக்கு சம்பளம் வரவில்லை என்பது மக்களுக்குத் தெரியுமா? மனுவை விட நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் அவளுடைய திறனை மட்டுமே ஊக்கப்படுத்தினேன்.
இந்தியாவுக்கு திரும்பிச் சென்று முதலில் பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வேலையைத் தேட வேண்டும். இந்த மூன்று வருடங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இதைப் பற்றி நான் ஒருபோதும் பேச விரும்பவில்லை. மனு ஒரு ஸ்டார். நான் வேலையில்லாத ஒரு பயிற்சியாளர்” என்றார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தனது கைத்துப்பாக்கியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மனு பாக்கர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மனு தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தான் சந்தித்த அவமானங்கள் குறித்து ராணா கூறும்போது, “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் போது என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள், வில்லனாக்கியவர்கள் இப்போது என்னிடம் நேர்காணல் கேட்கிறார்கள்.
பரவாயில்லை. நான் அவர்களுக்கு நேர்காணல் கொடுக்கிறேன். ஆனால், அவர்களால் எனக்கு ஏற்பட்ட இழப்பை எப்படி ஈடுசெய்யப் போகிறார்கள்?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விண்வெளியிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆதிக்கம்… ஸ்டாலின் கான்ஃபிடன்ட்!
குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆஜராக உத்தரவு!
மூணு வருசமா சம்பளம் தரலேனு சொல்லிட்டருல்ல, இனிமே அவரை கழட்டி விட்டுருவாய்ங்க, அவரைப் பத்தி எதாச்சும் புரளியக் கெளப்பி, இமேஜை காலி பண்ணிருவாய்ங்க