கடந்த 2022 ஆம் வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் அருகே கார் விபத்தில் சிக்கினார். அப்போது, அங்கிருந்த 25 வயது ரஜத்குமார் என்ற இளைஞர் தன் நண்பர் நிசுகுமாருடன் சேர்ந்து ரிஷப் பண்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அனுமதித்த பிறகே, தாங்கள் மீட்டது கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.
இந்த இளைஞர்களின் துரித முயற்சியால் ரிஷப் பண்ட் உயிர் பிழைத்து கொண்டார். பின்னர், தன்னை காப்பாற்றிய ரஜத்குமாருக்கும் அவரின் நண்பருக்கும் ரிஷப் பண்ட் ஸ்கூட்டர்கள் வாங்கி பரிசளித்தார்.
இந்த நிலையில், ரஜத்குமார் காதல் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜத்குமாரும் மனு காஷ்யப் என்ற 21 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளர். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனுவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து, காதலர்கள் இருவரும் விஷம் குடித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ரஜத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, மனுவின் தாய் , தனது மகளை கடத்தி சென்று ரஜத்குமார் விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.