HACT2023: ஜப்பானை சரித்து… இந்தியாவை தாண்டி… மலேசியா முதலிடம்!

விளையாட்டு

ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை மலேசியா அணி உறுதி செய்துள்ளது.

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 7) முதல் போட்டியில் மலேசியா – ஜப்பான் அணிகள் மோதின.

இதில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் களம் கண்ட  ஜப்பான் அணி, நடப்பு தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மலேசியாவுடன் ஆரம்பம் முதலே சொதப்பியது.

முதல் பாதியில், மலேசியாவின் நஜ்மி ஜஸ்லான் (13வது நிமிடம்) மற்றும் அஷ்ரன் ஹம்சானி (37வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல்பாதி முடிவில் 2-0 என்ற கணக்கில் பின் தங்கியது ஜப்பான் அணி.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது மலேசியா அணி. அந்த அணியின் ஷெலோ சில்வேரியஸ் 59வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

அதற்கு பதிலடியாக ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஜப்பான் அணியின் நிவா டகுமாவும் மலேசியாவின் தற்காப்பை சமாளித்து திருப்பி ஒரு கோல் அடித்தார்.

எனினும் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு கோல் அடிக்க முடியாத ஜப்பான் அணி 1-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியிடம் வீழ்ந்தது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் 0-5 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்த நிலையில், இன்றைய வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது மலேசியா.

இந்த போட்டியை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் சீனாவுடன் விளையாடி வருகிறது.

இரவு 8.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில், கொரியா அணியை சந்திக்க உள்ளது இந்தியா. அந்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில்  10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு நமது அணி முன்னேறும்.

கிறிஸ்டோபர் ஜெமா

மணிப்பூர் விவகாரம்: மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைப்பு!

அமலாக்கத் துறை வசம் செந்தில் பாலாஜி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *