பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி! காரணங்களை அடுக்கும் கிரிக்கெட் வல்லுநர்கள்!

விளையாட்டு

ஆசியக்கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதற்கு இந்திய அணியின் பந்துவீச்சே காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 4) மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 182 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

எப்போதுமே பாகிஸ்தானுடன் விளையாடும் இந்திய அணி, அதை பரம எதிரியாகத்தான் பார்க்கும். நம் ரசிகர்களும் அப்படித்தான் எண்ணுவர். இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி வெல்வதைத்தான் உயிர்மூச்சாகக் கொண்டிருப்பர். அதுபோல், வீரர்களும் இறுதிவரை உணர்ச்சிப் பெருக்குடன் விளையாடி வெற்றிபெற வைப்பர். ஆனால், நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் தலா 28 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர்.

பேட்டர்கள் சோடைபோயினர்

ஆனால் மற்ற வீரர்கள் பிரதான ரன்களை எடுக்கவில்லை. இந்திய அணி 5 ஓவர்களில் 54 ரன்களும், 10 ஓவர்களில் 100 ரன்களையும் எடுத்து இருந்தது. இதனால், அடுத்த 10 ஓவர்களில் இந்தியாவின் ரன் ரேட் இன்னும் உயரும் என்றே எல்லோரும் கணித்திருந்தனர். ஆனால், அவர்களின் கனவு பொய்யானது. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பாண்ட், ஹர்திக் பாண்டியா என இந்திய அணியின் பேட்டிங் பட்டாளம் பெரிய அளவில் சாதிக்கும் என்றிருந்த வேளையில், எல்லோரும் சோடைபோனதுதான் ஏமாற்றத்துக்குள்ளானது. அதிரடியாக ஆடுகிறேன் என்று கூறி, இந்திய வீரர்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு முதல்காரணம்.

இதனால் 15 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 135 எடுத்து தத்தளித்தது. முன்னாள் கேப்டன் விராட் கோலி 60 ரன்கள் எடுத்ததன் பயனாக, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் இந்த ரன்கள் என்பது மிகவும் குறைவானதே. ஆகையால் அதற்குத் தகுந்தாற்போல் பீல்டிங் மற்றும் பௌலிங்கில் இந்திய அணி கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறியதால்தான் நேற்று இந்திய அணி தோல்வி முகம் கண்டது.

ரன்களை வாரிவழங்கிய பந்துவீச்சாளர்கள்

குறிப்பாக, பாகிஸ்தான் அணியில், நவாஸும் ரிஸ்வானும் நங்கூரமாய் நின்று அணியை நிமிர்த்தினர். அவர்களுக்குப் பின் வந்திறங்கிய இணைதான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்தக் கூட்டணியை இந்திய அணியால் தகர்க்க முடியவில்லை. இவர்களை நீண்டநேரம் விளையாட வைத்ததும் இந்தியாவுக்கு தோல்வியாக அமைந்தது. அதற்குப் பிறகு 19வது ஓவரில் ஆட்டமிழந்த ஆசிப் அலியால் ஆட்டம் பரபரப்பானது. அப்போது, சரியாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியிருந்தால்கூட இந்திய அணி தோற்றிருக்காது என்பதுதான் கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும், வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் ஒரு யார்க்கர் பந்தைக்கூட வீசவில்லை. இதனால், அந்த ஒவரில் 19 ரன்கள் சென்றது. அந்த ஓவரில் ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்கும். அவர் மட்டுமல்ல, சாஹல், ஹர்திக் ஆகியோரும் ரன்களை வாரி வழங்கினர். ஒரு பெளலர் சொதப்பினால், மற்ற பெளலரை வைத்து அதைச் சரிப்படுத்த வேண்டும். மேலும், ஆறாவது பவுலிங் ஆப்ஷனை இந்திய அணி முயற்சி செய்யாததும் ஒரு காரணம். ஆனால், நேற்றைய போட்டியில் இது எதுவும் நடக்கவில்லை.

அதுபோல், இந்திய அணியின் தோல்விக்கு ஃபீல்டிங் ஒரு காரணம். 18வது ஓவரில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்சை ஆர்ஸ்தீப் பிடித்திருந்தால் ஆட்டமே மாறி இருந்திருக்கும். ரிஸ்வானுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பை ரவி பிஸ்னாய் வீணடித்தார். அதுபோல் ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேல், அஸ்வின் அல்லது தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும். இதையும் இந்திய அணி செய்யவில்லை. அதேநேரத்தில், தீபக் ஹூடாவை தேர்வு செய்தும், அவருக்கு ஒரு ஓவர் கூட தராதது மிகப் பெரிய ஏமாற்றம். இதனால்தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு 90 சதவிகிதம் இருந்தும் தோற்றுப்போனது என்கின்றனர், கிரிக்கெட் வல்லுநர்கள்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *