பார்டர்-கவாஸ்கர் டிராபி : ‘டூப்ளிகேட்’ அஸ்வினை களமிறக்கிய ஆஸ்திரேலியா
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரவிசந்திரன் அஸ்வின் சுழலை எதிர்கொள்ள பயப்படும் ஆஸ்திரேலியா வீரர்கள் ‘டூப்ளிகேட்’ அஸ்வின் மூலம் பெங்களூருவில் பயிற்சி பெற்று வரும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை வரும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் பலம் வாய்ந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் சந்திக்கின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைய இரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராக அமைந்துள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் தொடங்குகிறது.
அச்சுறுத்தும் அஸ்வின்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருக்கும் பொது எதிரி சுழற்பந்து வீச்சு தான். அதிலும் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை எதிர்கொள்வதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரும் தலைவலியாகவே கருதுகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 89 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐந்து முறை 5 விக்கெட்டுகளையும், ஒருமுறை 10 விக்கெட்டுக்களை எடுத்ததும் இதில் அடங்கும். மேலும் இந்தியாவுக்கு எதிராக தற்போது விளையாட உள்ள ஆஸ்திரேலியாவின் உச்ச நட்சத்திரங்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசேன் போன்றவர்களின் விக்கெட்டை பலமுறை சாய்த்து கதிகலங்க வைத்துள்ளார்.
இப்படி தங்களுக்கு பரம எதிரியாக இருக்கும் அஸ்வினின் சுழல் தாக்குதலில் இருந்து எப்படி தங்களை காத்துக்கொள்வது என்ற தவிப்பில் இருந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு சமீபத்தில் வந்த ஒரு போன் கால் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
போர் பயிற்சியில் டூப்ளிகேட்
என்னது போன்காலா? என்று நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு முக்கியமான ஒரு எடுத்துக்காட்டை முன்வைக்க விழைகிறேன்.
போர் பயிற்சியில் ஈடுபடும் உலக நாடுகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் தங்கள் எதிரியை தாக்குவதற்கு முன்னாள் அவரை போலவே உயரத்தில், பருமனில் உருவ அமைப்பை ஒத்திருக்கும் நபர்கள் அல்லது பொம்மைகளுடன் தாக்குதல் பயிற்சியை மேற்கொள்வர்.
இன்னும் புரியும்படியாக சொல்ல வேண்டுமென்றால், சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அதில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ், தனது 3 மகன்களுக்கு அய்யாவின்(சரத்குமாரின் அப்பா) உருவபொம்மையை வைத்து சரியாக கழுத்தில் வெட்டுவதற்கு பயிற்சி கொடுப்பார்.
இவ்வாறு செய்வதன் மூலம் எதிராளியை எப்படி தாக்குவது அல்லது எப்படி தற்காத்து கொள்வது என்பதில் நிறைய பயிற்சி பெற முடியும். மேலும் எதிராளி மீதான பகையை தங்களிடம் தக்க வைக்க முடியும்.
இந்நிலையில் அந்த உத்திக்கும் மேலாக, இந்தியாவை பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எப்படியாவது வெற்றி பெற துடிக்கும் ஆஸ்திரேலியா எடுத்துள்ள உத்தி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இன்ஸ்டா வீடியோவில் டூப்ளிகேட்
சில நாட்களுக்கு முன், ரஞ்சி போட்டியில் விளையாடி வரும் பரோடா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிரீதேஷ் ஜோஷி, நடப்பு தொடரில் அறிமுகமான பித்தியா மகேஷ் பவுலிங் குறித்து ஆஸ்திரேலியா நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
அவரது பந்துவீச்சினை ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள் இன்ஸ்டா வீடியோவில் கண்டனர். பித்தியாவின் பந்துவீச்சு ஆஃப்-பிரேக், ஆர்ம் பால் மற்றும் கேரம் பாலை அசால்ட்டாக வீசும் இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினின் பந்துவீச்சை அப்படியே உரித்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து டெஸ்ட் தொடரை முன்னிட்டு பயிற்சி பெறுவதற்காக பெங்களூரு வந்துள்ள ஆஸ்திரேலியா அணி பந்துவீச பித்தியா மகேஷ்க்கு முறைப்படி அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று அஸ்வினின் ’டூப்ளிகெட்’ ஆன பித்தியா மகேஷ் இன்று முதல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி வருகிறார்.
யார் இந்த பித்தியா மகேஷ்?
கடந்த 2022ம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வரும் நடப்பு ரஞ்சி கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக அறிமுகமானவர் பித்தியா மகேஷ். குஜராத்தில் உள்ள ஜூனாகத் பகுதியைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி பெட்டி கூட இல்லாத ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்.
தனது 11வது வயதில் முதன்முறையாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் போது தனது சுழற்பந்துவீச்சால் மிரட்டிய அஸ்வினை முதன்முறையாக பார்த்துள்ளார். அவரை பார்த்தே வளர்ந்தவர், அவரை போலவே பந்துவீசவும் செய்துள்ளார். இதனால் அவரை எல்லோரும் பொதுவாக அஸ்வின் என்றே அழைத்து வந்தனர்.
பின்னர் போர்பந்தரில் கல்லூரி படித்து வந்த பித்தியா, பெரும்பான்மையான நேரத்தை கிரிக்கெட் களத்திலேயே கழித்துள்ளார். அதன்பின்னர் பரோடாவுக்கு சென்ற அவர் பதான் சகோதரர்களின் கண்ணில் பட்ட நிலையில், யூசுப் பதானின் கீழ் மிக தீவிர பயிற்சியை பெற்றார்.
பந்துவீச்சில் அஸ்வினை உரித்து வைத்தது போல் பந்துவீசிய பித்தியா நடப்பு ரஞ்சி தொடரில் பரோடா அணிக்காக விளையாட தேர்வானார். அங்கும் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தான் தற்போது பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு முன்பாகவே பயிற்சி பெற பெங்களூரு வந்தடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார்.
பித்தியாவிற்கும், அஸ்வினுக்கும் இடையே உடல் அளவில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பித்தியா மெலிந்த உடலமைப்புடன் இருந்தாலும், அஸ்வினின் பந்துவீச்சு ஸ்டைலை பல மணி நேர பயிற்சியின் மூலம் அப்படியே தனதாக்கி அதில் தற்போது வெற்றியும் பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதுகுறித்து பித்தியா மகேஷ் கூறுகையில், “நான் அசல் பெயரால் மிகவும் அரிதாகவே அழைக்கப்படுகிறேன். என்னை பெரும்பாலான மக்கள் அஸ்வின் என்றே அழைக்கின்றனர். இன்றும் எனது மொபைலில் அவருடைய பவுலிங் வீடியோக்கள் நிறைய உள்ளன. அவர் தான் என்னுடைய இன்ஸ்பிரேசன். ஒரு நாள் அவரைச் சந்திப்பது எனது கனவு, அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது கடைசி ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடிய சில நாட்களுக்குள், அஸ்வினின் டூப்ளிகேட் பித்தியா மகேஷ் பெங்களூருக்கு வந்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி வருகிறார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் பித்தியா மகேஷ் பந்துவீசும் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் பெங்களூரில் உள்ள KSCA ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், லாபுனேசன் உள்ளிட்ட வீரர்களுக்கு பித்தியா பந்துவீசுவதும், அதனை கண்டு அங்குள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் “அஸ்வின் போலவே வீசுகிறார்” என்று பாராட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அசலுக்கு மதிப்பு அதிகம்
என்னதான் டூப்ளிகேட்டை வைத்து ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சி செய்தாலும் அசலுக்கு எப்போதும் மதிப்பு அதிகம் தானே!
கிரிக்கெட் களத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அடையாள சுழற்பந்து வீச்சு மூலம் எப்போதும் மாயஜாலம் நிகழ்த்தக்கூடியவர். தனது அனுபவ பந்துவீச்சின் மூலம் பல மாறுபாடுகளை உருவாக்கி எதிரணி வீரர்களை தொடர்ந்து திணறடித்து வருபவர். அதற்கு சமீபத்தில் முடிந்த பங்காளதேஷ் தொடரே சிறந்த உதாரணம்.
இதனால் டூப்ளிகேட் அஸ்வினுடன் தீவிரமாக பயிற்சி பெறும் ஆஸ்திரேலியா அணி, ஒரிஜினல் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை காண ஆவல் அதிகரித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஷாருக்கான் – டாம் குரூஸ் ஒப்பீடு : அமெரிக்கா எழுத்தாளரை வச்சு செய்த ரசிகர்கள்!
கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம்!