டி20 உலகக்கோப்பை அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது.
சவால் நிறைந்த இந்த டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதற்கு முன்பு ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களை பற்றி பார்ப்போம்:
ப்ரட் லீ:
ஆஸ்திரேலியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ப்ரட் லீ கடந்த 2007 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலக கோப்பையில் கேப் டவுன் நகரில் வங்கதேசத்துக்கு எதிராக வீசிய 17வது ஓவரில் ஷாகிப் அல் ஹசன், மஸ்ரபி மோர்தசா, அலோக் கபாலி ஆகியோரை அடுத்தடுத்த 3 பந்துகளில் காலி செய்தார்.

இதன் மூலம் சர்வதேச டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளராக அவர் சாதனை படைத்தார்.
ப்ரட்லீயின் அபார பந்து வீச்சில் வெறும் 123/8 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டிய ஆஸ்திரேலியா பின்னர் 9 விக்கெட் வித்யாசத்தில் எளிதாக வென்றது.
குர்ட்டிஸ் கேம்பர்:
அதன்பின் 2009, 2010, 2012, 2014, 2016 ஆகிய வருடங்களில் நடந்த உலகக்கோப்பைகளில் எந்த பவுலரும் ஹாட்ரிக் எடுக்காத நிலையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் மட்டும் 3 ஹாட்ரிக் நிகழ்ந்தது.

அதில் முதலாவதாக அபுதாபியில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து வெறும் 106 ரன்களுக்கு சுருண்டது.
காரணம் 10 வது ஓவரில் பந்து வீசிய குர்ட்டிஸ் கேம்பர் ஆக்கர்மேன், டேன் டஸ்சேட், எட்வர்ட்ஸ், வேன் டெர் மெர்வி ஆகிய 4 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த 4 பந்துகளில் விக்கெட் எடுத்து ஹாட்ரிக்கையும் மிஞ்சி டபுள் ஹாட்ரிக் என்ற வரலாறு படைத்தார்.
இந்த போட்டியில் அயர்லாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
வணிந்து ஹசரங்கா:
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அதே டி 20 உலகக்கோப்பையில் சார்ஜாவில் நடைபெற்ற 25ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 143 ரன்களை கட்டுப்படுத்தும் போது ஐடன் மார்க்ரம், தெம்பா பவுமா, ட்வயன் பிரிடோரியஸ் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களை 18 வது ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாக்கினார் வணிந்து ஹசரங்கா.

ஆனாலும் அதிலிருந்து மீண்டெழுந்த தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவரில் போராடி வெற்றி பெற்றது.
ககிசோ ரபாடா:
அதே தொடரில் 39 வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து 19 வது ஓவரில் 176/5 என்ற நிலையில் வெற்றியை நெருங்கியது.

குறிப்பாக கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது பந்தை கையிலெடுத்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான கிறிஸ் ஓக்ஸ், கேப்டன் இயன் மோர்கன், கிறிஸ் ஜோர்டான் ஆகிய 3 முக்கிய வீரர்களை முதல் 3 பந்திலேயே அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் இங்கிலாந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“குல்தீப் இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை” : அஷ்வின்
டி20 உலகக்கோப்பை: தீபக் சாஹர் விலகல் – மாற்று வீரர் யார்?