நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் அடித்திருந்தது.
இதனால் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனால் டிஎல்எஸ் விதிப்படி சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கான்வே, துபே, ரஹானே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் அடித்து 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“தோனி தலைமையிலான மஞ்சள் படை 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள். இது ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டி. நெருக்கடியான நேரத்தில் ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உறுதிசெய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்