IPL 2024 : பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டி லக்னோவில் நேற்று இரவு (மார்ச் 30) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஒரு முக்கிய மாற்றமாக லக்னோ அணியின் கேப்டன் பதவி கே.எல்.ராகுலுக்கு பதிலாக நிக்கோலஸ் பூரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் டிகாக் 54 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் பூரன் 42 ரன்களும், குருனால் பாண்டியா 43 ரன்களும் அதிரடியாக அடித்திருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஷிகர் தவன் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் இந்த போட்டியில் பஞ்சாப் அணி எளிதில் வெற்றியடையும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அறிமுக வீரரான மயங்க் யாதவ் 12வது ஓவரில் பேர்ஸ்டோ விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து அவர் வீசிய அடுத்த இரண்டு ஓவர்களில் களம் கண்ட பிரப்சிம்ரன் சிங்(19) மற்றும் ஜித்தேஷ் சர்மா(6) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கிடையே களமிறங்கிய லிவிங்ஸ்டன் காயத்துடன் தடுமாற, நன்றாக விளையாடி வந்த ஷிகர் தவான் (70) மற்றும் சாம் கரன் விக்கெட்டை 17வது ஓவர் வீசிய மோஷின் கான் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க, 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோற்ற லக்னோ, இந்த போட்டியில் வென்று நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதேவேளையில் முதல் போட்டியில் டெல்லி அணியை வென்ற பஞ்சாப் அணி, தொடர்ச்சியாக பெங்களூரு மற்றும் லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”261 சரித்திர பதிவேடு ரவுடிகள் பாஜகவில் உள்ளனர்“ : டேட்டா மூலம் மோடியை போட்டுத் தாக்கிய ஸ்டாலின்
டிஜிட்டல் திண்ணை: ED க்கு மோடியின் அவசர அசைன்மென்ட்- அலர்ட் ஸ்டாலின்