எலிமினேட்டர் சுற்றில் மும்பை-லக்னோ: வெளியேறப்போவது யார்?

Published On:

| By Jegadeesh

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(மே24) நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 6 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 16 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இஷான் கிஷன் ஒருசில ஆட்டங்களில் விரைவில் விக்கெட்டை இழப்பது மும்பை அணிக்கு மைனஸ். எனினும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட் வலுசேர்க்கின்றனர்.

குறிப்பாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கேமரூன் க்ரீன் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். பந்துவீச்சில் மத்வால், பெஹ்ரென்டார்ஃப் தங்கள் பணிகளை சிறப்பாக செய்கின்றனர். சுழற்பந்தில் பியூஷ் சாவ்லா கலக்குகிறார்.

குமார் கார்த்திகேயாவின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஒட்டுமொத்த அணியும் முழு பங்களிப்பை அளித்தால் தான் லக்னோ அணியை வீழ்த்த முடியும்.

நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடிள்ள லக்னோ அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 17 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு லக்னோ அணி முன்னேறியது.

லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் காயம் காரணமாக வெளியேறினாலும், க்ருணால் பாண்டியா தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மேட்ச் வின்னரை லக்னோ அணி உருவாக்குவதால், எந்த வீரர் எப்படி விளையாடுவார் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது.

இருப்பினும் தொடக்க வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியை ஒப்பிடும் போது லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சு அபாரமாக உள்ளது. க்ருணால் பாண்டியா, ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா என்று அபாயகரமான வீரர்கள் இருக்கிறார்கள். எனவே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும்…வெளியேறப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!

சாவர்க்கர் பிறந்தநாளில் திறப்பு விழா: புறக்கணிக்கும் விசிக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel