நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 62 லீக் போட்டிகள் நடந்திருந்தாலும், நேற்று (மே 16) வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ – மும்பை இடையிலான ஆட்டம் ’டி20 போட்டி’ அதிரடியான திருப்பங்கள் கொண்ட ஒரு அட்டகாசமான களம் என்பதை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தியது.
ஐபிஎல் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குஜராத் அணி மட்டுமே இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கு 18 புள்ளிகளுடன் தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு சென்னை, மும்பை, லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய 7 அணிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தான் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை நேற்று இரவு தனது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
அணியை கரைசேர்த்த க்ருணால் – ஸ்டோனிஸ்
கே.எல். ராகுல் இல்லாத நிலையில் க்ருணால் பாண்டியா தலைமையில் களமிறங்கி டாஸில் தோற்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது. அவ்வளவு தான் என்று லக்னோ ரசிகர்களே நினைத்தனர்.
அப்போது களம் கண்ட கேப்டன் க்ருணால் (49*) மற்றும் ஆல்ரவுண்டர் ஸ்டோனிஸ் (89*) ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் பாதுகாப்பான ஸ்கோரை எட்ட உதவியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்தது.
ஆரம்பம்… அமர்களம்!
இதைத்தொடர்ந்து 178 ரன்களை சேஸ் செய்த மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். எனவே ஆட்டத்தில் மும்பை அணியின் கையே ஓங்கி இருந்தது.
ஆனால் ரோஹித் 37 ரன்களிலும், இஷான் கிஷன் அரைசதம் பூர்த்தி செய்து 59 ரன்களிலும் எடுத்து தனது விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்தனர்.
அதன்பிறகு வந்த ’மிஸ்டர் 360’ சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த நேஹல் வதேரா 16 ரன்னிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த வினோத் 2 ரன்னிலும் அவுட் ஆக மும்பை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
திக் திக் கொடுத்த கடைசி ஓவர்கள்
எனினும் கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் களத்தில் அதிரடி ஆல்ரவுண்டர்கள் டிம் டேவிட் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் இருந்தனர். எனவே அப்போதும் வெற்றி வாய்ப்பு மும்பை வசமே இருந்தது.
நவின் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 18 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 பந்துகளில் 11 ரன்கள் என்ற எளிதான இலக்கு வர, கடைசி ஓவரை மொசின் கான் வீசினார்.
அவரின் துல்லியமான பந்துவீச்சில் தடுமாறிய டிம், க்ரீன் இருவரும் 5 ரன்கள் மட்டும் எடுக்க, லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று 15 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறினர்.
கட்டாய வெற்றியில் மும்பை, லக்னோ
பிளே ஆஃப் சுற்று கனவுடன் வந்து, அதிரடியாக ஆரம்பித்து மயிரிழையில் தோற்று ஏமாற்றமளித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் வரும் 21ஆம் தேதி நடைபெறும் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கட்டயாமாக வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த போட்டியில் வென்றாலும், தங்களது ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்த வரும் 20ஆம் தேதி நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பதே உண்மை.
கிறிஸ்டோபர் ஜெமா
என் அனுமதியில்லாமல் யாரையும் வேலைக்குச் சேர்க்கக்கூடாது: எலான் மஸ்க்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!