இந்தியா – பாகிஸ்தான் போட்டி: விற்பனையாகாத டிக்கெட்டுகள்!

Published On:

| By christopher

ஆசியக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள சூப்பர்4 சுற்று போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. எனினும் வானிலை காரணமாக இதுவரை குறைவான அளவில் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடத்தப்படும் ஆசியக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் கருதப்படுகிறது.

கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற இரு அணிகள் இடையேயான லீக் போட்டி  மழையால் ரத்து செய்யப்பட்டது. எனினும் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை 48.5 ஓவரில் 266 ரன்னுக்கு ஆல்-அவுட் செய்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிரட்டினர்.

பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணியில், இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை.

தற்போது இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் வங்காளதேச அணியை எளிதாக வீழ்த்தியது.

மழை இடையூறா?

அதேவேளையில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது.

இந்த நிலையில் பரம வைரிகளான இரு அணிகளுக்கும் மிகப்பெரிய இடையூறாக வானிலை நிலவுகிறது. ஏற்கெனவே லீக் ஆட்டம் தடைபட்ட நிலையில் இந்த போட்டி மழை குறுக்கீடு இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதற்கேற்ப கொழும்புவின் வானிலையில் கடந்த 3 நாட்களாக  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  நேற்று இதே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மழை ஒருமுறை கூட குறுக்கீடு செய்யவில்லை.

அதேபோன்று இன்று காலை முதலே கொழும்புவில் மழை மேகங்கள் இல்லாமல் நன்றாக வெயில் அடித்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனை இந்திய அணி வீரர் அஸ்வின் உறுதிபடுத்தியுள்ளார்.

பொதுவாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றால் உடனே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும். இந்த நிலையில் மழை காரணமாக இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இதுவரை பெருமளவில் வாங்கப்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வானிலை மாற்றத்தை தொடர்ந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் எளிதாக கிடைக்க தொடங்கியுள்ளது.

 

மீண்டு வருமா இந்தியா?

ஆசியக்கோப்பை தொடரில் இன்னும் முழுத்திறனை வெளிப்படுத்த முடியாமல் இந்திய அணி தவித்து வருகிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான ரோகித், கோலி ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை காட்டவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியின் ரன் குவிப்பு இன்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் முதல் 5 ஓவர்களில் 3 கேட்சுகளை விட்டது பீல்டிங் தரத்தை காட்டியது.

பந்துவீச்சில் ஜடேஜா தவிர யாரும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த தொடரில் இன்னும் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. அதேவேளையில் அனுபவ வீரர் பும்ராவின் வருகை இந்திய அணிக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பலமான பாகிஸ்தான்!

நம்பர் 1 அணியான பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சு எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதே உண்மை

தற்போது புள்ளிப்பட்டியலில் தலா 2 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. எனவே பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டியது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

1000ஆவது குடமுழுக்கு விழா கோலாகலம்: முதல்வர் பெருமிதம்!

தமிழ் சினிமா: ஒழுக்கம் தவறும் பெரிய படங்கள்… புற்றீசலாய் சாகும் சிறுபடங்கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share