கோலி முதல் சாஹல் வரை… 2024 IPL-ல் படைக்கப்பட்ட சாதனைகள்!
IPL 2024 Records: மார்ச் 22 அன்று 2024 ஐபிஎல் தொடர் மே 26 அன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
முந்தைய தொடர்களுடன் ஒப்பிடுகையில், இந்த தொடர் முழுவதுமே பல அதிரடி ஆட்டங்களால் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதில், கவனிக்கத்தக்க சாதனைகளின் பட்டியல் இதோ.
விராட் கோலி – 8004 நாட்-அவுட்
இந்த 2024 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டுவரும் விராட் கோலி, 1 சதம், 5 அரைசதங்கள் உட்பட 741 ரன்களை குவித்து ‘ஆரஞ்சு கேப்’ விருதை வென்றார். இதுமட்டுமின்றி, தனது இந்த அபாரமான ஆட்டத்தின்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 8,000 ரன்களை விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் – 205 அவுட்
2024 ஐபிஎல் தொடரில் 2ஆம் குவாலிஃபையர் வரை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல், இந்த தொடரில் 15 போட்டிகளில் 18 விக்கெட்களை கைப்பற்றினார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்களை சாஹல் பூர்த்தி செய்துள்ளார். இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற பெருமையையும் சாஹல் பெற்றுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 287/3
முன்னதாக, 2013-ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 263 ரன்கள் சேர்த்ததே, ஐபிஎல் தொடரில் ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. 10 ஆண்டுகள் அந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்த நிலையில், மார்ச் 27 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அந்த சாதனையை முறியடித்தது.
பின், ஏப்ரல் 15 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 287 ரன்கள் குவித்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய வரலாறு படைத்தது.
பஞ்சாப் கிங்ஸ் – 262/2
2024 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை, 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 224 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணியே முறியடித்துள்ளது.
இந்த தொடரில், ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 261 ரன்கள் குவித்து, 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்தது. ஆனால், பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் ஆகியோரின் அதிரடியால் அந்த இலக்கை 18.2 ஓவர்களிலேயே எட்டிய பஞ்சாப் அணி, ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையை பெற்றது.
மொத்த சிக்ஸ்கள் – 1260
இந்த 2024 ஐபிஎல் தொடர் ஒரு அதிரடி நிறைந்த தொடராகவே இருந்த நிலையில், இந்த தொடர் முழுக்க மொத்தம் 1260 சிக்ஸ்களை வீரர்கள் பறக்கவிட்டனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 125/0 (6 ஓவர்ஸ்)
இந்த 2024 ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஒரு அதிரடி துவக்கத்தை அளித்தனர். இதன்மூலம், பவர்-பிளே முடிவில் அந்த அணி 125 ரன்களை சேர்த்தது. ஐபிஎல் வரலாற்றில் மட்டுமின்றி, ஒரு டி20 போட்டியில் பவர்-பிளேவில் ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ரன்கள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் சர்மா – 42 சிக்ஸ்கள்
2024 ஐபிஎல் தொடரில் மொத்தம் 42 சிக்ஸ்களை விளாசிய அபிஷேக் சர்மா, இந்த தொடருக்கான ‘சூப்பர் சிக்ஸஸ் ஆஃப் தி சீசன்’ விருதை வென்றார். இதுமட்டுமின்றி, ஒரு ஐபிஎல் தொடரில் 40-க்கும் அதிகமான சிக்ஸ்களை விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழை பாதிப்பு: வீடு இழந்த இலங்கை தமிழர்கள் கோரிக்கை!
பியூட்டி டிப்ஸ்: கூந்தல் வெடிப்பை தடுக்க என்ன செய்வது?
தேசிய திறந்தநிலைப் பள்ளி சான்றிதழ்: தமிழக அரசாணைக்கு இடைக்காலத் தடை!
டாப் 10 செய்திகள் : 234 தொகுதிகளிலும் விஜய் அன்னதானம் முதல் வெப்பம் அதிகரிப்பு வரை!