இத்தனை வருடங்களாக நீங்கள் என்ன துன்பத்தை அனுபவித்தீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று மெஸ்ஸி குறித்து அவரது மனைவி உணர்ச்சிப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக கோப்பையை வென்றது.
நட்சத்திர வீரர் மெஸ்ஸி இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்து தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். வெற்றிக்கு பிறகு கோப்பையை மெஸ்ஸி முத்தமிடும் புகைப்படமும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மைதானத்தில் அமர்ந்து எடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இந்தநிலையில், மெஸ்ஸி குறித்து அவரது மனைவி அண்டோனிலா ரோக்குசோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில், “world champions… எனக்கு இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. மெஸ்ஸி, உங்களுக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
முயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று நீங்கள் எங்களுக்கு கற்று கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இறுதி வரை போராடி உலக கோப்பையை வென்றுள்ளீர்கள்.
இத்தனை வருடங்களாக நீங்கள் என்ன கஷ்டப்பட்டீர்கள், எதனை பெற விரும்பினீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.. முன்னோக்கி செல்லுங்கள் அர்ஜென்டினா” என்று பதிவிட்டுள்ளார்.
மெஸ்ஸி மனைவியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக பல பேர் இதுபோன்ற கணவன் மனைவி அமைய வேண்டும் என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
செல்வம்
ப்ளஸ் 2-வில் 75 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தால் கல்வி கட்டணம் இலவசம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!