குரோஷியா – அர்ஜெண்டினா அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியின் போது மெஸ்ஸிக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால், அவர் நாளை (டிசம்பர் 18) நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.
கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற குரோஷியா – அர்ஜெண்டினா அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியின் போது நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டதால், போட்டி நிறைவடைந்த பின்னர் மைதானத்தில் இருந்து மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றார்.
இந்தநிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது மெஸ்ஸி பங்கேற்காததால், அவர் இறுதிப் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டதாக அர்ஜெண்டினா அணி தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடவில்லை.
அரையிறுதி போட்டியின் தொடக்க லெவனில் ஆடிய வீரர்களுக்கு நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது ஓய்வு அளிக்கப்பட்டதாகவும், மெஸ்ஸி ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் அர்ஜெண்டினா அணி மேலாளர் லியோனல் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.
இதனால் மெஸ்ஸி இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மெஸ்ஸிக்கு ஏற்பட்ட காயத்தால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு இது கடைசி உலக கோப்பை தொடர் என்பதால் இறுதி போட்டியில் அவரது அதிரடி ஆட்டத்தை காண உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
செல்வம்
காசி தமிழ் சங்கமம் நிறைவு: மோடியின் மிகப்பெரிய முயற்சி-அமித்ஷா புகழாரம்!