ரொனோல்டோவின் இமாலய சாதனையை முறியடித்த மெஸ்ஸி

விளையாட்டு

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனோல்டோவிடம் இருந்து தட்டி தூக்கியுள்ளார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.

அர்ஜென்டினா அணிக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி தற்போது பிஎஸ்ஜி எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து கிளப் அணியில் விளையாடி வருகிறார்.

மெஸ்ஸியிடம் எல்லை மீறிய ரசிகர்கள்

இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் பிஎஸ்ஜி அணி – மெஸ்ஸி இடையேயான ஒப்பந்தம் முடிவடைகிறது. இதனையடுத்து அவர் அந்த அணியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் பிரெஞ்ச் லீக்கில் கடந்த 3ம் தேதி லயன் அணியிடம் 1-0 என்ற கணக்கில் பிஎஸ்ஜி அணி தோற்றபோது மெஸ்ஸியை அந்த அணியின் ரசிகர்கள் கேலி செய்தார்கள். மேலும் அந்த அணியில் எந்த வீரர்கள் தவறு செய்தாலும் அதற்கும் அவரையே குற்றம்சாட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் அளவுக்கு மீறிய இந்த கேலியும், விமர்சனமும் பிஎஸ்ஜி கால்பந்து கிளப்புக்கும் – மெஸ்ஸிக்கும் இடையே நீடித்து வரும் மோசமான உறவை பிரதிபலித்து வருகிறது. மேலும் அதே அணியில் உள்ள பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாபே மற்றும் மெஸ்ஸிக்கும் இடையே உள்ளூற மோதலும் நிலவுவதாக பேசப்படுகிறது.

இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக மெஸ்ஸி பிஎஸ்ஜி கால்பந்து கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸியால் கிடைத்த வெற்றி

இதற்கிடையே பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் லீக் கால்பந்து தொடரில் நேற்று(ஏப்ரல் 8) இரவு மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியும், நைஸ் அணியும் மோதின.

பரப்பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஸ் அணியை வென்றது.

கடந்த ஒருவாரமாக பிஎஸ்ஜி அணி ரசிகர்களால் கேலி செய்யப்பட்ட மெஸ்ஸி, நைஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து 76வது நிமிடத்தில் சக வீரர் செர்ஜியோ ராமோஷ் கோல் போடவும் உதவினார்.

இதன்மூலம் தொடர்ந்து 14 போட்டிகளாக தோல்வியை சந்திக்காமல் முன்னேறி வந்த நைஸ் அணியை தோற்கடித்து, பிஎஸ்ஜி அணி 6 புள்ளிகள் முன்னிலையுடன் பிரெஞ்ச் லீக்கில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

ரொனோல்டோவின் சாதனை முறியடிப்பு

அதேவேளையில் நைஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் ஐரோப்பிய கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரரான கிறிஸ்டியானோ ரொனோல்டோவின் சாதனையை முறியடித்துள்ளார் மெஸ்ஸி.

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 949 போட்டிகளில் 701 கோல் அடித்திருக்கிறார். இந்நிலையில் மெஸ்ஸி 846 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 702 கோல்கள் அடித்திருக்கிறார். ரொனால்டோவை விட 103 போட்டிகள் குறைவாக விளையாடி அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி இந்த சாதனையை படைத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவற்றில் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையை துவங்கிய பார்சிலோனா அணிக்காக 672 கோல்களும், பிஎஸ்ஜி அணிக்காக 30 கோல்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னே நிற்கும் ரொனோல்டோ

சமீபத்தில் பனாமா – அர்ஜெண்டினா நாடுகளுக்கு இடையே நட்புறவு போட்டியில் ஒரு கோல் அடித்தார் மெஸ்ஸி. அந்த கோலானது அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் சேர்த்து மெஸ்ஸி அடித்த 800வது கோலாக பதிவானது. அந்த பட்டியலில் 830 கோல் அடித்து ரொனோல்டோ முதலிடத்தில் உள்ளார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற குரோக்கோ அணிக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் 3 ஹாட்ரிக் கோலை பதிவு செய்த மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக 100 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதன்மூலம் சர்வதேச அளவில் தங்களது சொந்த நாட்டு அணிக்காக 100 கோல்களை பதிவு செய்தவர்கள் பட்டியலில் 3வது வீரராக மெஸ்ஸி இடம்பெற்றார். அந்த பட்டியலிலும் 122 கோல்களை அடித்து கிறிஸ்டியானோ ரொனோல்டோ முதலிடத்தில் உள்ளார்.

முதலிடம் பிடித்த மெஸ்ஸி

இருவருமே கால்பந்து உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்றாலும் பல்வேறு சாதனை பட்டியலில் மெஸ்ஸிக்கு முன்னதாக ரொனொல்டோ இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தான் பிரெஞ்ச் லீக் தொடரில் நைஸ் அணிக்கு எதிராக அடித்த ஒரு கோல் மூலம் ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக 702 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனொல்டோவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி.

அதே வேளையில் அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் மெஸ்ஸி அடித்த கோலின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து வழக்கம்போல ரொனோல்டோவா, மெஸ்ஸியா என்ற ரசிகர்களின் வாக்குவாதம் சமூக வலை தளங்களில் உருவாகியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

விடிய விடிய காத்திருந்து… டிக்கெட் வாங்கிச் செல்லும் சி.எஸ்.கே ரசிகர்கள்

ஆஸ்கர் தம்பதியை சந்தித்தார் பிரதமர் மோடி

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *