கடந்த சில நாட்களாக கால்பந்து உலகில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸி இணைய உள்ள அடுத்த கிளப் எது என்பது தான்.
தனது 16வயதில் பார்சிலோனா அணிக்காக கால்பந்து உலகில் தடம் பதித்த மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளில் உலகில் யாருமே தொட முடியாத பல சாதனை படைத்தார்.
123 ஆண்டுகால வரலாறு கொண்ட பார்சிலோனா கிளப் வரலாற்றில், 778 போட்டிகள், 672 கோல்கள் மற்றும் உலகின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி’ஓர் விருதை ஆறு முறை பெற்றுள்ளதுடன் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் மெஸ்ஸி.
பிஎஸ்ஜி-ல் இணைந்தார்!
17 வெற்றிகரமான சீசன்களுக்குப் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு பார்சிலோனா அணியில் இருந்து விலகிய மெஸ்ஸி, பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கிளப் அணியில் இணைந்தார்.
பிஎஸ்ஜி கிளப்புக்காக மெஸ்ஸி 75 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 34 கோல்களை அடித்தும், 32 முறை கோல்களை அடிக்க சக வீரர்களுக்கு உதவியும் உள்ளார். மேலும் இந்த ஆண்டு லீக் ஒன் கோப்பையை பிஎஸ்ஜி வெல்லவும் உதவினார்.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி கிளர்மாண்டி அணிக்கு எதிராக பிஎஸ்ஜி அணிக்கான தனது கடைசி போட்டியில் விளையாடினார்.
அதனையடுத்து அவர் பிஎஸ்ஜி கிளப்பில் இருந்து பிரிந்ததை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பார்சிலோனோவா? அல்-ஹிலாலா?
இதனையடுத்து அவர் அடுத்ததாக எந்த அணியில் இணைவார் என்பது கால்பந்து உலகில் பெரும் கேள்வியாக எழுந்தது.
அதன்படி மெஸ்ஸி தனது ஆரம்பகால கால்பந்து வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த ஐரோப்பிய அணியான பார்சிலோனோ கிளப்புக்கே திரும்புவார் என்றும்,
சவுதி புரொபஷனல் லீக் கிளப்பான அல்-ஹிலாலுக்கு பெரும் தொகைக்கு செல்வார் என்றும் கூறப்பட்டது.
இண்டர் மியாமியில் மெஸ்ஸி
இந்நிலையில் நேற்று ஒரு பேட்டியில் தெரிவித்தபடியே மெஸ்ஸி அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான இன்டர் மியாமியில் இணைந்துள்ளார்.
இதனை இண்டர் மியாமி அணியும் தனது சமூக ஊடகங்களில் மெஸ்ஸியுடனான ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த மேஜர் லீக் சாக்கர் (MLS) சீசனில் தான் தனது முதல் போட்டியை விளையாடிய இண்டர் மியாமி இதுவரை ஒரு கோப்பைக் கூட வெல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக பீலே, பெக்காம் மற்றும் தியரி ஹென்றி போன்ற சூப்பர் ஸ்டார்களை ஈர்த்துள்ள அமெரிக்க கால்பந்தாட்டத்திற்கும், இண்டர் மியாமி கிளப்பிற்கும் மெஸ்ஸியின் வருகை பெரும் ஊக்கம் அளிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
எனினும் இதுவரை அவர் எவ்வளவு தொகைக்கு எத்தனை ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவரவில்லை.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே இன்னிங்ஸில் 903 ரன்கள்… கதிகலங்க வைக்கும் ஓவல் மைதான ரெக்கார்ட்!
நெல்லுக்கான ஆதரவு விலை உயர்வு: எதிர்க்கும் விவசாயிகள்!
சென்னை கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்