இளம் வீரர்களிடம் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 -ன் திரைப்பட விழா நேற்று (ஜூலை 20) மும்பையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் , நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஷிகர் தவான், “பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாற்றம் மட்டுமே நம்முடைய வாழ்வில் நிலையான ஒன்று. கால நேரத்திற்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தற்போது இளம் வீரர்கள் புதிய உத்திகளையும் புதிய சிந்தனையையும் கொண்டிருக்கிறார்கள். நான் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி இருந்தாலும் தற்போது இளம் வீரர்களை பார்த்து நானே ஊக்கம் பெற்று இருக்கிறேன்.
குறிப்பாக சிலர் விளையாடும் ஷாட்களை பார்த்து அவர்களிடமே சென்று இதை எப்படி நீங்கள் ஆடுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறேன்.
ஒருமுறை நானும் சூரிய குமார் யாதவும் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் ஒரு ஷாட் மூலம் சிக்ஸர் அடித்தார்.
நான் அவரிடம் சென்று இதை எப்படி விளையாடினாய் என்று கேட்டேன். அவரும் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
உடனே இதை நான் வலைப்பயிற்சியில் செய்து பார்க்கப் போகிறேன் என்று கூறினேன்” என்று சூர்யகுமார் யாதவ் உடனான தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“இதுபோன்ற மன நிலையில் இருந்தால் தான் நாமும் வளர முடியும். நாங்கள் இளம் வீரர்களாக இருக்கும்போது எங்களுடைய பயிற்சியாளர்கள் தூக்கி அடிக்காதே தரையோடு ஷாட் விளையாடு என்று கூறுவார்கள்.
இதன் காரணமாகவே நாங்கள் பெரிய ஷாட்டுகளை அவ்வளவாக விளையாட மாட்டோம். இதே போன்ற மனநிலையில்தான் நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் எல்லாம் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறார்கள்.
இப்போது உள்ள இளம் வீரர்களுக்கு பயமே கிடையாது. ஆனால் எங்களுக்கு அப்படி அல்ல. ஷாட்டுகளை தரையோடு தான் விளையாட வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.
ஆனால் இளம் வீரர்கள் தூக்கி அடிக்கும் போது தங்களது விக்கெட்டை பறிகொடுத்தாலும் அவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இருப்பது கிடையாது. இந்த மாற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார்.
மேலும், உலகக்கோப்பையில் விளையாடுவது என்பது ஒரு சிறந்த உணர்வு.
முதன் முதலில் நான் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தேர்வானபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று ஷிகர் தவான் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: வரகரிசி சொஜ்ஜி
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!