ஈட்டி எரிதலில் தங்கமகனாக ஜொலித்து வரும் நீரஜ் சோப்ரா சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
அதுதான், ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் ஆகும். இதனால், அவர் ’இந்தியாவின் தங்க மகன்’ என்று மக்களால் கொண்டாடப்பட்டார்.
தொடர்ந்து நீரஜ் சோப்ரா அடுத்தடுத்த பதக்கங்களை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். அந்த வரிசையில் சுவிட்சர்லாந்து லாசானே நகரில் நேற்று (ஜூன் 30) நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

87.66 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 87.03 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாவது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் 86.13 எறிந்து மூன்றாமிடமும் பிடித்தனர்.
நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு இதே தொடரில், 88.44 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், சூரிச்சில் நடந்த டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ’முதல் இந்தியர்’ என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
அதன்பின்னர் கடந்த மே 5 ஆம் தேதியன்று தோஹாவில் நடந்த மதிப்புமிக்க டயமண்ட் லீக் தொடரின் முதல் லெக்கில் 88.67 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் கடந்த மே மாதத்திற்கான உலக தடகள தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் நீரஜ் சோப்ரா.
மோனிஷா