Diamond League 2024: ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டிகளுக்காக நடைபெறும் டைமண்ட் லீக் விளையாட்டுத் தொடர், இந்த ஆண்டு சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் கடந்த ஏப்ரல் 22 அன்று துவங்கியது.
ஆடவர் & மகளிர் என தலா 16 தடகள விளையாட்டு பிரிவுகள் இந்த டைமண்ட் லீக் தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில், அவற்றிற்கான இறுதிப்போட்டி செப்டம்பர் 13 & 14 அன்று பெல்ஜியத்தில் உள்ள ப்ருஸ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
அந்த இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஏப்ரல் 20 துவங்கிய நிலையில், 14 நகரங்களில் செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ளது.
இவற்றில், ஆடவர் ஈட்டி எறிதலுக்கான போட்டிகள் தோஹா, பாரிஸ், லோசான் மற்றும் ஸுரிச் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. தோஹா மாற்றும் பாரிஸ் தகுதி சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், லோசான் நகரில் 3வது சுற்று ஈட்டி எறிதல் போட்டி நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 2022 டைமண்ட் லீக் தொடரில் ‘தங்கம்’, 2023 டைமண்ட் லீக் தொடரில் ‘வெள்ளி’ என தொடர்ந்து 2 ஆண்டுகளாக பதக்கங்களை வென்ற நீரஜ் சோப்ரா, இம்முறை மீண்டும் தங்கப் பதக்கத்தை நோக்கி களமிறங்கினார்.
இந்த போட்டியின் முதல் சுற்றில் 82.10 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா, அந்த சுற்றின் முடிவில் 4வது இடம் பிடித்தார். அடுத்த சுற்றில் 83.21 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்தபோதும், நீரஜ் சோப்ரா 4வது இடத்திலேயே தொடர்ந்தார்.
கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர்ஸ் மற்றும் உக்ரைனின் ஆர்தர் ஃபெல்ஃப்னர் ஆகியோர், நீரஜ் சோப்ராவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து முதல் 3 இடங்களில் தொடர்ந்தனர்.
ஆனால், 5வது சுற்றில் 85.58 மீ ஈட்டிய எறிந்து 3வது இடத்திற்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா, கடைசி சுற்றில் 89.49 மீ தொலைவுக்கு ஈட்டியை எறிந்து 2வது இடம் பிடித்தார். இது அவரின் சீசன் பெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே கடைசி சுற்றில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீ தொலைவுக்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார். 87.08 மீ தொலைவுக்கு ஈட்டியை எறிந்த ஜூலியன் வெப்பர்ஸ் 3வது இடம் பிடித்தார்.
முதலாவதாக தோஹாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, அந்த ஆட்டத்திலும் 2வது இடமே பிடித்திருந்தார். அந்த போட்டியில் லோசானில் 7வது இடம் பிடித்த ஜகுப் வட்லெச் முதலிடத்தையும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3வது இடத்தையும் பிடித்தனர்.
அடுத்து பாரிஸில் நடைபெற்ற போட்டியில், நீரஜ் சோப்ரா பங்கேற்காத நிலையில், அங்கு ஜூலியன் வெப்பர்ஸ், ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஜகுப் வட்லெச் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.
இந்த 3 தகுதி சுற்று ஆட்டங்களின் முடிவில், 21 புள்ளிங்கள் பெற்று முதலிடத்தில் உள்ள ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும், 16 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ள ஜகுப் வட்லெச் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர். புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்ற நிலையில், தலா 14 புள்ளிகளுடன் நீரஜ் சோப்ராவும், ஜூலியன் வெப்பர்ஸும் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ளனர்.
இந்நிலையில், ஸுரிச்சில் செப்டம்பர் 5 அன்று நடைபெறும் கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில், சிறப்பாக செயல்பட்டு முதல் 3 இடங்களை பிடிக்கும் பட்சத்தில், நீரஜ் சோப்ராவுக்கு இறுதிச்சுற்றில் இடம் உறுதியாவிடும்.
இறுதிச்சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 13 & 14 அன்று பெல்ஜியத்தில் உள்ள ப்ருஸ்சல்ஸ் நகரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு ஊழியர்களாக்க வேண்டும் : அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!
பியூட்டி டிப்ஸ்: அமோனியா ஃப்ரீ (Ammonia Free) ஹேர் டை ஆரோக்கியமானதா?
டாப் 10 நியூஸ் : தேசிய விண்வெளி தினம் முதல் கொட்டுக்காளி, வாழை ரிலீஸ் வரை!
ஹெல்த் டிப்ஸ்: வெளியே கிளம்பும்போது வயிற்றைப் புரட்டுகிறதா… காரணம் இதுதான்!