சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷை தோற்கடித்து உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள செயின்ட் வின்சென்ட்டில் இன்று (ஜூன் 25) காலை நடந்த கடைசி சூப்பர் 8 சுற்று போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் பொறுமையாக ஆடி 43 ரன்கள் அடித்தார். அவரையடுத்து கடைசி நேரத்தில் களம் கண்ட கேப்டன் ரஷீத் கான் அதிரடியாக ஆடி 3 சிக்சர்களுடன் 19 ரன்கள் விளாசினார்.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு மழை காரணமாக 19 ஓவர்களில் 114 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வங்கதேச அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் தொடக்க வீரர் லிட்டன் தாஸ்(54*) ஒருபுறம் பொறுப்புடன் போராடினாலும், மறுபுறம் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ரஷீத் கான் மற்றும் நவீன் உல் ஹக் பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
மேலும் ஆப்கானின் வெற்றியாக குரூப் 1ல் இடம்பெற்றிருந்த ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.
எங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சி!
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் கூறுகையில், “நாங்கள் அரையிறுதியில் இருப்பது எங்களுக்கு ஒரு கனவு போன்றது. நாங்கள் லீக் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த போது நம்பிக்கை வந்தது. இப்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது நம்பமுடியாதது, என் உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த பெரிய சாதனைக்காக எங்கள் நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்று நம்பிய ஓரே லெஜெண்ட் பிரையன் லாரா மட்டுமே. போட்டி தொடங்கும் முன்னர், நான் அவரிடம், ‘நீங்கள் கூறியதை நாங்கள் செய்து காட்டுவோம்” என்று கூறினேன். சொன்னபடியே அதை நாங்கள் சரி என்று நிரூபித்துள்ளோம்.
எனது அணி வீரர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இந்த விக்கெட்டில் 130-135 ரன்கள் எடுக்க வேண்டுமென நாங்கள் நினைத்தோம். ஆனால் 15-20 ரன்கள் குறைவாகவே இருந்தோம். . அரையிறுதிக்குள் நுழைவதற்கு 12 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
எனினும் வெற்றி பெறுவது என்பது மனநிலையைப் பற்றியது. நாங்கள் ஸ்டம்புக்குள் பந்துவீசியதால், அவர்களை வெளியேற்றுவதற்கு எங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. தவிர கூடுதலாக எதுவும் செய்யவில்லை.
திட்டங்களில் நாம் தெளிவாக இருந்தோம். எல்லோரும் ஒரு அற்புதமான வேலை செய்தார்கள்.
டி20களில், குறிப்பாக பந்துவீச்சில் எங்களுக்கு வலுவான அடித்தளம் உள்ளது. எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள், அதிவேகமாக பந்துவீசக்கூடியவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் திறமையானவர்கள். டி20களில், திறமை இருந்தால், சிறப்பாக செயல்படலாம். அதனை இந்த தொடர் முழுவதும் நிரூபித்துள்ளோம்.
தற்போது அரையிறுதிக்குள் நுழைந்தது எங்களுக்கு ஒரு பெரிய சாதனை. ஒரு அணியாக நாங்கள் செயல்பட்ட விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரையிறுதியில் இருப்பது எங்கள் மீதான பொறுப்பை அதிகரித்துள்ளது. அதற்கு தெளிவான மனதுடன் செல்ல வேண்டும்” என்று ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘பாட்டல் ராதா’ : முதல் தோற்றம் எப்படி?
செவிலியர்களுக்கு இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி : தமிழக அரசு அழைப்பு!