மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
பார்படாஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவின் குல்தீப் – ஜடேஜா சுழலில் சிக்கி 23 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் 43 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், 3 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதில் 2 ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து 115 என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ஒருபுறம் துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும், மறுபுறம் இஷான் கிஷனின் பொறுப்பான ஆட்டத்தால், 22.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷன் 52 (46) ரன்களை சேர்த்தார்.
இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொர்ந்து 9வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
தனது சிறப்பான பந்துவீச்சால் 4 விக்கெட்களை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங்கை சுருட்டி தள்ளிய குல்தீப் யாதவ், இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை பெற்றார்.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி, இதே கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூலை 29 அன்று நடைபெறவுள்ளது.
முரளி சுப்ரமணியன்
புன்னகையால் இணையத்தை கவர்ந்த வேலம்மாள் பாட்டி காலமானார்!
கால்வாய் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திய என்.எல்.சி!