இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
இந்திய அணி, இலங்கை அணியை எதிர்த்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இன்று (ஜனவரி 10 ) விளையாடுகிறது. வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சுமார் 1214 நாட்களுக்கு பிறகு சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் கோலி.
இந்நிலையில், ஒரு நாள் போட்டியில் இன்று களமிறங்கும் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்கும் முனைப்பில் களம் காண உள்ளார். விராட் கோலி கடைசியாக அடித்த சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை முறியடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை 20 சதங்கள் அடித்துள்ளார். விராட்கோலி 19 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சதம் அடிக்கும் பட்சத்தில் சச்சினின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மற்றொரு சாதனையையும் முறியடிக்க உள்ளார் கோலி. உலகிலேயே அதிக ரன்களை எடுத்த முதல் ஐந்து வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார, ரிக்கி பாண்டிங், சனத் ஜெயசூர்யா, மஹேல ஜெயவர்த்தனே ஆகியோருக்கு அடுத்த இடத்தில் விராட்கோலி உள்ளார். அவர் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ள மொத்த ரன்கள் 12,471 ஆகும்.
அவர் இந்த முதல் ஐந்து இடத்திற்குள் நுழைய இன்னும் 180 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த ரன்களை கோலி கடந்தால் உலகிலேயே அதிக ரன்களை எடுத்த முதல் ஐந்து வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டங்களில் சச்சின் மற்றும் விராட் கோலி இதுவரை 8 சதங்களை அடித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் சச்சின் மற்றும் கோலியை தவிர வேறு எந்த வீரரும் அதிக சதம் அடித்ததில்லை.
இலங்கைக்கு எதிராக சச்சின் இதுவரை விளையாடிய 84 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3,113 ரன்கள் குவித்துள்ளார். அதே நேரம் விராட் கோலி இலங்கைக்கு எதிராக 47 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,220 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த தொடரில் கோலி சதம் அடித்தால், ஒரு அணிக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். மேலும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டங்களில் முறையே 9 சதங்களுடன் கோலி மற்றும் டெண்டுல்கர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தமிழகம் கொடுப்பது கனிமம், கேரளா கொடுப்பது கழிவா? – நீதிபதிகள் அதிருப்தி!
“எதோ முடிவோடதான் வந்திருக்கீங்க போல” – சிரித்துக் கொண்டே கேட்ட ஓபிஎஸ்