கிளாசென் – மில்லரின் அதிரடியான பேட்டிங் மூலம் உலகக்கோப்பைக்கான எச்சரிக்கையை தென்னாப்பிரிக்கா அணி விடுத்துள்ளது. அதேவேளையில், டிராவிஸ் ஹெட் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்காக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.
ருத்ரதாண்டவம் ஆடிய கிளாசென்!
இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் இதுவரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து செஞ்சூரியனில் நேற்று (செப்டம்பர் 16) நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 416 என்ற இமாலய இலக்கை குவித்தது. இதன்மூலம் அந்த அணி ஒரு நாள் போட்டிகளில் 400 ரன்களை 7வது முறையாக குவித்து சாதனை படைத்துள்ளது.
கடைசி 20 ஓவர்களில் 268 ரன்களும், கடைசி 10 ஓவர்களில் 173 ரன்களும் தென்னாப்பிரிக்கா குவித்தது. அதில் கிளாசென் வெறும் 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார். 13 சிக்ஸர், 13 பவுண்டரி விளாசிய அவர் 57 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்த 2வது வீரர் என்ற சாதனையை கிளாசென் படைத்துள்ளார்.
முன்னதாக 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவின் விராட் கோலி 52 பந்துகளில் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாசனுக்கு உறுதுணையாக ஆடிய மில்லர் 45 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். இருவரும் ஜோடி சேர்ந்து 92 பந்துகளில் 222 ரன்கள் எடுத்தனர். இதுவும் சாதனையாக அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியா படுதோல்வி!
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் 34. 5 ஓவர்களில் 252 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
டிராவிஸ் ஹெட் காயம்; ஆஸ்திரேலியா சோகம்!
இதற்கிடையே பேட்டிங்கின் போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான டிராவிஸ் ஹெட் கையில் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு தோல்வியைத் தாண்டி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணிக்கான 15 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியலில் டிராவிஸ் ஹெட் இடம்பெற்றுள்ளார்.
வரும் 28ஆம் தேதிக்குள் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள், 15 வீரர்கள் கொண்ட தங்கள் அணியின் இறுதிப் பட்டியலை ஐசிசிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில் டிராவிஸ் ஹெட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் உலகக் கோப்பையில் விளையாடுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறுகையில், ”டிராவிஸ் ஹெட்டுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், நாளை(இன்று) நடைபெற உள்ள ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு காயத்தின் தன்மை குறித்து தெரியவரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பையில்ஆஸ்திரேலியா அணி தனது முதலாவது ஆட்டத்தில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவை சந்திக்க உள்ளது.
அதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்பட்ட பின்னடைவாக டிராவிஸ் ஹெட் காயம் கருதப்படுகிறது.
அதே நேரத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளதன் மூலம் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்க கூடிய அணியாக உருவாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 778 பேர் பலி!
அமலாக்கத்துறை பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்!