நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு அணியில் விராட் கோலி, டூப்ளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டூப்ளசிஸ் 8 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து கேமரூன் கிரீனுடன் இணைந்த விராட் கோலி நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தார்.
அடுத்தடுத்து கேமரூன் கிரீன் (33), மேக்ஸ்வெல் (28) ஆட்டமிழக்க, விராட் கோலி தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட், சுனில் நரேன் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் நான்குபுறமும் பந்துகளை பறக்கவிட்டர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
சுனில் நரேன் 47 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதனால் 16.5 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…