டெஸ்ட் தொடர் கேப்டன் பொறுப்பிலிருந்து தான் விலகியபோது, தோனியை தவிர தனக்கு யாரும் மெசேஜ் அனுப்பவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 44 பந்துகளுக்கு 60 ரன்கள் குவித்தார். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, கடைசி ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்து இந்தியாவை வீழ்த்தியது.

இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, “இந்த ஆண்டு ஜனவரி மாதம், நான் டெஸ்ட் போட்டி தொடரின் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது, தோனி மட்டும் தான் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். நிறைய பேரிடம் என்னுடைய தொலைபேசி எண் இருக்கிறது. ஆனால் தோனியைத் தவிர எனக்கு யாரும் மெசேஜ் அனுப்பவில்லை. நீங்கள் ஒருவருடன் உண்மையான தொடர்பு மற்றும் மரியாதை வைத்திருந்தால், இரு தரப்பிலிருந்தும் பாதுகாப்பு உணர்வு இருப்பதை நீங்கள் உணர முடியும். தோனி எனக்கு மெசேஜ் அனுப்பியதை நான் அப்படி தான் பார்க்கிறேன். தோனியிடமிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை. அவருக்கும் என்னிடமிருந்து எதுவும் தேவைப்படப் போவதில்லை. யாரிடமாவது ஒரு விஷயத்தை நான் கூற விரும்பினால் அவர்களைத் தனியாக அணுகி தான் நான் கூறுவேன். தொலைக்காட்சி மூலமாக நீங்கள் எனக்கு ஆலோசனை வழங்க விரும்பினால், அது எனக்கு எந்த மதிப்பையும் அளிக்காது. நீங்கள் எனக்கு அளிக்கும் ஆலோசனைகளை, நேருக்கு நேர் என்னிடம் தெரியப்படுத்தினால் அதனை நான் நேர்மையாகக் கருதுவேன்.” என்றார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் மிகவும் மன அழுத்ததில் இருந்ததாகக் கோலி தெரிவித்தார். அதிலிருந்து மீண்டு வர தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தநிலையில், தற்போது அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபோது தோனியை தவிர யாரும் எனக்கு மெசேஜ் செய்யவில்லை என்ற கருத்து கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
செல்வம்