மும்பை நகரில் பல ஜிம்கானாக்கள் உள்ளன. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த இவைகள் அமைக்கப்பட்டன. இங்கு, குறைந்த பணம் கட்டி நாம் பயிற்சிகள் மேற்கொள்ள முடியும். அந்த வகையில், மும்பையில் கார் பகுதியிலுள்ள கார் ஜிம்கானா மிக பழமையானது ஆகும்.
இந்த ஜிம்கானாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ்க்கு கௌரவ உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் அட்டை இது. இந்த நிலையில், இந்த ஜிம்கானா ஹாலை ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிகஸ் மத பிரசங்கத்துக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கார் ஜிம்கானாவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜெமிமா நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கார் ஜிம்கானா கமிட்டி உறுப்பினர் ஷிவ் மல்கோத்ரா கூறுகையில், பொதுவாக விளையாட்டு வீரர்களை நாங்களே கவுரவப்படுத்தும் வகையில் உறுப்பினராக ஆக்குகிறோம். லியாண்டர் பயஸ், பி.வி. சிந்து கூட எங்கள் கிளப்பில் உறுப்பினர்கள்தான். ஆனால், இங்கு மத பிரசாரம் செய்வதற்கு அனுமதியில்லை. இங்குள்ள ஹாலை 35 முறை ஜெமிமாவின் தந்தை புக் செய்து மத கூட்டங்களை நடத்தியுள்ளார்.
Brother Manuel Ministries என்ற பெயரில் கார் ஜிம்கானாவில் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இவை அனைத்தும் ஜெமிமாவின் பெயரில் புக் செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளன. மத நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை. இது குறித்து ஜெமிமாவின் பெற்றோரிடத்தில் விளக்கம் கேட்டால் , பதில் இல்லை. தொடர்ந்து , ஜெமிமா கார் ஜிம்கானாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கார் ஜிம்கானாவில் உறுப்பினராக வேண்டுமென்றால் 3 ஆண்டுகளுக்கு 10 லட்சம், 12 லட்சம், 15 லட்சம் என பல வகைகளில் பணம் செலுத்த வேண்டும். அவ்வளவு எளிதாக உறுப்பினராகி விட முடியாது. பலத்த போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நாளை வெளியாகும் ‘அமரன்’ டிரெய்லர்!
இவர்களை ஏன் தவிர்க்க வேண்டும்… இர்பானால் நொந்த பெண் டாக்டர்