மும்பையிலுள்ள புகழ்பெற்ற கார் ஜிம்கானாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ்க்கு கௌரவ உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் அட்டை இது.
இந்த நிலையில், ஜிம்கானா ஹாலை ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிகஸ் மத பிரசங்கத்துக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கார் ஜிம்கானாவின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து ஜெமிமா நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இது குறித்து கார் ஜிம்கானா கமிட்டி உறுப்பினர் ஷிவ் மல்கோத்ரா கூறுகையில், “பொதுவாக விளையாட்டு வீரர்களை நாங்களே கவுரவப்படுத்தும் வகையில் உறுப்பினராக ஆக்குகிறோம். லியாண்டர் பயஸ், பி.வி. சிந்து கூட எங்கள் கிளப்பில் உறுப்பினர்கள்தான். ஆனால், இங்கு மத பிரசாரம் செய்வதற்கு அனுமதியில்லை. இங்குள்ள ஹாலை 35 முறை ஜெமிமாவின் தந்தை புக் செய்து மத கூட்டங்களை நடத்தியுள்ளார்.
Brother Manuel Ministries என்ற பெயரில் கார் ஜிம்கானாவில் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இவை அனைத்தும் ஜெமிமாவின் பெயரில் புக் செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளன. மத நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கார் ஜிம்கானா தலைவர் விவேக் தேவனானி ஜெமிமாவின் தந்தை குறித்து எழுந்த குற்றச்சாட்டு உண்மையில்லை என்று மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஜெமிமாவின் தந்தை மீதான குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் உள்ளது. அந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த மாத இறுதியில் கார் ஜிம்கானா நிர்வாக குழு மற்றும் டிரஸ்டிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆதாயம் பெறும் வகையில் ஒரு கும்பல் இப்படி வதந்தியை கிளப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை” : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
ராவணனாக நடிக்கும் ’கேஜிஎஃப்’ யஷ் !