கேரளாவில் நடந்த கால்பந்து போட்டியில் மகனுக்கு நடுவர் ரெட் கார்டு காட்டியதால், வாளை எடுத்து மிரட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முவாத்தூபுழா என்ற இடத்தில் சிறுவர்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியில் விளையாடிய மூவாத்துப்புழவை சேர்ந்த சிறுவன் ஒருவனின் தந்தையான ஹாரீஸ் அமீர் என்பவர் போட்டியை காண வந்திருந்தார்.
ஆட்டத்தின் போது ஹாரீஸ் அமீரின் மகன் எதிர் அணி வீரர் ஒருவரிடத்தில் பவுல் ஆட்டம் ஆடியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுவனுக்கு நடுவர் ரெட் கார்டு காட்டி களத்தை விட்டு வெளியேற்றினார். ஆனால், அந்த சிறுவன் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளான். இதையடுத்து, வீரர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை கண்ட ஹாரீஸ் அமீர் மைதானத்துக்குள் புகுந்து அங்கிருந்த இளம் வீரர்கள், நடுவர்களை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த ஹாரீஸ் அமீர் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து நடுவர் மற்றும் வீரர்களை எச்சரித்தார். மேலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, உங்களை சும்மா விட மாட்டேன் என்றும் கத்தியுள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, சிறார்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஹாரீஸ் அமீரை கைது செய்தனர். அவர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், உயிருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
லட்டுவில் கலப்படம்: திருப்பதி கோயிலில் மகா சாந்தி யாகம்!
புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை!