பெண்களுக்கான சர்வதேச செஸ் போட்டியில் புர்கா அணிந்து விளையாடிய வீரர் ஒருவர் அப்பட்டமாக சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கென்யாவில் பெண்களுக்கான சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக 25 வயதான மில்லிசெண்ட் ஆவாவுர் என்ற பெயரில் ஒரு வீராங்கனை தனது பெயரை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து முழு உடலை மறைக்கும் வகையில் இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா, கண்ணாடி அணிந்து போட்டியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் இருந்தே அபாரமாக ஆடியா மில்லிசெண்ட் அடுத்தடுத்து 4 சுற்றுகளில் தொடர் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே இந்த சர்வதேச போட்டியில் புது வீராங்கனையாக அறியப்பட்ட மில்லிசென்ட்டின் அதிரடியான வெற்றியும், அவரது நடவடிக்கையும் அங்கிருந்த போட்டி அமைப்பாளர்களிடையே சந்தேகத்தை எழுப்பியது.
அதனைத்தொடர்ந்து அவரது 4வது சுற்றை முடிந்து அவரை தனியாக அழைத்து சென்று பரிசோதித்தனர்.
அப்போது புர்காவிற்குள் மறைந்திருந்தது மில்லிசெண்ட் என்ற பெண் அல்ல, ஸ்டான்லி ஓமண்டி என்ற பிரபலமான செஸ் வீரர் என்று தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஓமண்டியிடம் விசாரித்தனர். அப்போது, போட்டியில் வெற்றி பெற்றால் பரிசாக நிதி கிடைக்கும் என்பதால் புர்கா அணிந்து பங்கேற்றதாக ஓமண்டி உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் எந்த தண்டனை கொடுத்தாலும் அதனை ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கென்யாவின் செஸ் தலைவர் பெர்னார்ட் வஞ்சாலா கூறுகையில், ”முதலில் எங்களுக்கு ஸ்டான்லி குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் போட்டியில் பங்கேற்கும் இஸ்லாமிய வீராங்கனைகள் ஹிஜாப் அணிவது சாதாரணமானது.
ஆனால் ஓமண்டி மிகவும் வலிமையான வீராங்கனைகளுக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றார். அறிமுகப் போட்டியில் விளையாடும் ஒருவர் இதை செய்வதற்கு வாய்ப்பில்லை.
அத்துடன் போட்டி நேரத்தில் எதிராளி உட்பட அவர் யாருடனும் பேசவில்லை. அவர் அணிந்திருந்த ஆண்களுக்கான ஷூவும் சந்தேகத்தை எழுப்பியது.” என்றார்.
மேலும் அவர்,”நான்காவது சுற்றில் ஓமண்டி விளையாடும்போது அதிகாரிகள் இதனை கண்டுபிடித்து விட்டனர். ஆனால் மத உடையின் காரணமாக அவருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக சர்ச்சை எழும் என்ற நோக்கில் போட்டி முடியும் வரை காத்திருந்தனர்.
தான் செய்த தவறை ஓமண்டி ஒப்புக்கொண்டாலும், அவருக்கு பல ஆண்டுகளுக்கு செஸ் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.” என்று கூறினார்.
தற்போது ஓமண்டி குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு அடுத்த இரண்டு நாட்களில் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆணவ படுகொலை: பெற்ற தாயையும், மகனையும் கொடூரமாக கொன்ற தந்தை!
ரூ.31.8 கோடிக்கு கேமரூனின் ஒரு பகுதியை வாங்கிய நித்தியானந்தா?