பார்டர் கவாஸ்கர் போட்டி: விராட் கோலி மீது கபில் தேவ் நம்பிக்கை!
பார்டர் கவாஸ்கர் போட்டியில் விராட் கோலி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் போட்டி கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ரவிந்திர ஜடேஜா, அஷ்வினின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 177ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி சுருண்டது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா, அக்சர் பட்டேலின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 321ரன்கள் எடுத்திருந்தது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தநிலையில் விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறும்போது, “பார்டர் கவாஸ்கர் போட்டியில் விராட் கோலி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
முதல் போட்டி அவருக்கு மிகவும் முக்கியமானது. அதில் அவர் அதிக ரன்களை எடுத்தால் அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
முதல் போட்டியில் கோலி 50 ரன்கள் எடுத்தால், இந்த தொடரில் நிச்சயமாக அவர் இரண்டு அல்லது மூன்று சதங்களை விளாசுவார்.
நாக்பூர் ஆடுகளமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இப்போதெல்லாம், 60 சதவீத ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், 200 – 250 ரன்கள் அடிப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி 300 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்கை எட்ட வாய்ப்பிருக்கிறது. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தால் விராட் கோலி ரன் எடுப்பது உறுதி.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஈரோடு வந்த மத்திய பாதுகாப்புப் படை!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுகாதாரத் துறையில் பணி!