“ஸ்மார்ட் ஆக விளையாடினால் பேட்டிங் திறனை வெளிப்படுத்த முடியும்” என இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று (செப்டம்பர் 25 ) நடந்த கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அவ்வணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
ஆரோன் பின்ச் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் அரைசதம் எடுத்தனர். இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடி இந்திய அணியானது துவக்கத்திலேயே ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டை இழந்தது.
எப்படி இந்த சரிவிலிருந்து இந்திய அணி மீளப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜோடி இணைந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
அதில் குறிப்பாக 36 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 69 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்த பின்னரும் களத்தில் இறங்கி அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவின் அற்புதமான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், ”இது போன்ற சூழ்நிலைகளில்தான், நான் விரும்பி விளையாட நினைக்கிறேன்.
ஏனெனில், இதுபோன்ற இக்கட்டான வேளைகளில் என்னுடைய வாய்ப்பை எடுத்துக் கொண்டு என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

அதேபோன்று இந்த ஆட்டத்தில் என்னிடம் இரண்டு மூன்று வித்தியாசமான ஷாட்கள் இருந்தாலும் ஒன்று மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
இந்த மைதானத்தில் இந்த பீல்டிங் செட்டப்பிற்கு ஏற்ப ஓவர் மிட் ஆஃப் திசையில் அடிக்க விரும்பி விளையாடினேன்.
என்னுடைய திட்டம் தெளிவாக இருந்தது. அதனாலே என்னால் எந்தவித சிக்கலும் இன்றி அதிரடியாக விளையாட முடிந்தது.
நான் நான்காவது இடத்தில் இறங்கி விளையாடுவதை விரும்பிச் செய்து வருகிறேன். அந்த இடத்தில் இறங்கி விளையாடுவது சவாலான ஒன்றுதான்.
ஆனாலும் கொஞ்சம் ஸ்மார்ட் ஆக விளையாடினால் பேட்டிங் திறனை அந்த இடத்தில் வெளிப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்